Thursday, December 15, 2016

இனிப்பு: ஒரு மருத்துவ அறிக்கையைத் தேடுகிறேன்

இந்தப் பதிவினைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம். இனிப்பு எனும் எனது
ஆவணப்படத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒரு அலோபதி மருத்துவ அறிக்கையைத் தேடிக் கொண்டுள்ளேன். அவ்வாறான அறிக்கை இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
ஒருவேளை, உங்களால் அவ்வறிக்கையைக் கண்டறிய முடிந்தால், எனக்கு அனுப்பி வையுங்கள்.

அந்த அறிக்கை எதுவென்றால்,

”ஒரு மனிதருக்குச் சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால் அவர்
மரணமடைந்தார்’’ எனும் அறிக்கை.

சர்க்கரை ஓர் ஆட்கொல்லி நோய் என எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்
செய்யப்படுகின்றன. ஆனால், அது கொலை செய்த மனிதரை என்னால் காண இயலவில்லை.
இந்த அறிக்கைக்கென சில நிபந்தனைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

1. அந்த மனிதருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என உறுதிப்படுத்தும் முதல்
இரத்தப் பரிசோதனை அறிக்கை இணைக்கப்பட வேண்டும்.

2. அந்த மனிதர் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் இருந்திருக்க
வேண்டும். இது அவரது உறவினர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

3. அந்த மனிதர் இறந்த பின்னர், அவரது மரணம் சர்க்கரை நோயினால் மட்டுமே
ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள் இணைக்கப்பட
வேண்டும்.

சர்க்கரை ஓர் ஆட்கொல்லி நோய். மருந்துகள் உட்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அந்த நோய் தீவிரமடைந்து உயிரைப் பறிக்கும்’ என்ற அலோபதியின் கருத்தினைஅதே அலோபதியின் அறிக்கைகள் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் மேற்கண்ட நிபந்தனைகளின் வழியாக நான் முன்வைக்க விரும்பும் கருத்து.

இந்த அறிக்கையை நான் தேடும்போதெல்லாம், வேறு ஒரு வகை மருத்துவ அறிக்கை எங்கு பார்த்தாலும் தென்படுகிறது. ‘அந்த மனிதருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அவர் அலோபதி மருந்துகள் உட்கொண்டார். பின்னர் அந்த மனிதர் இறந்துவிட்டார்’ என்னும் அறிக்கைதான் அது.

இறந்தவரைக் கொலை செய்தது சர்க்கரை நோயா அல்லது அவர் உட்கொண்ட மருந்துகளா என்ற கேள்விக்கு ‘அறிவியல்பூர்வமான’ விடையைக் காண வேண்டும் அல்லவா.

700 கோடி மனிதர்கள் வாழும் இந்தப் புவியில் எனது தேடலுக்கு உட்பட்ட அந்த
ஒரே ஒரு மருத்துவ அறிக்கை கிடைக்காமல் போவது வேதனை தருவதாக உள்ளது.
அதைக்காட்டிலும் வேதனையானது என்னவெனில், இப்படி ஓர் அறிக்கையைப் பார்க்காமலேயே சர்க்கரை நோய் வந்தால் மரணமே கதி
என மக்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான். ஆகவே, ’அறிவியல் பூர்வமான
ஆதாரத்தை’ எனது ஆவணப் படத்திலும், நூல்களிலும் முன் வைக்க
விரும்புகிறேன்.

அலோபதிக்கு மட்டும்தானே அறிவியல் சொந்தமானது! தனது மொத்த அறிவியல் அறிவையும் பயன்படுத்தி, எனது தேடலுக்கான அறிக்கையை அத்துறை முன் வைக்கட்டும்

- ம.செந்தமிழன்

Wednesday, December 7, 2016

எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்! -பெங்களூரு கலவரம் குறித்து

எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்!

-பெங்களூரு கலவரம் குறித்து....

ம.செந்தமிழன்

’எந்தச் சூழலிலும் எதிர்வினை ஆற்றாதீர்கள்; எப்போதும் மறுவினை ஆற்றுங்கள்’ என்று என்னுடன் பயணிப்பவர்களிடம் கூறுவதுண்டு. எதிர்வினை, மறுவினை ஆகிய சொற்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாதவையாகிவிட்டதால், ‘Never react. Always respond’ என்று ஆங்கிலத்தில் கூறினால் உங்களுக்கு இன்னும் எளிதாகப் புரியும்.

திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டால் அல்லது மோசமான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டால், உடனடியாக அவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இந்தச் சூழல்களில் மறுவினை ஆற்றத் துவங்கினால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். எதிர்வினை ஆற்றுவது தற்காலிகப் பலன்களை வழங்கும், நிரந்தரத்தை முற்றிலும் ஒழித்துவிடும்.
ஏனெனில், அநீதிகளின் அடித்தளம் உணர்ச்சிகளால் மட்டுமே வலுப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் உணர்ச்சியின் பிடியில் ஒப்படைத்துவிடுவது அநீதிக்காரர்களின் சிறந்த தந்திரம். அதே உணர்ச்சி வழியில் சென்று வெற்றியடைந்த ஒரே ஒரு நேர்மையாளரைக்கூட இதுவரை உலகம் கண்டதில்லை, இனியும் காணப் போவதில்லை. இங்கே தீயவர்கள் கால்கள் ஓயாமல் ஆடிக்கொண்டுள்ளன. நல்லவர்களின் அடித்தளமோஎதிர்வினைகளில் சிக்கிக் கிடக்கிறது.

காவிரி நீர் வழங்குதலை முன்வைத்து தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் எல்லா வன்முறைகளும் அநீதிக்காரர்களின் பேயாட்டங்கள்தான். இப்போது நாம் எதிர்வினை ஆற்றுவதைக் காட்டிலும் மறுவினை ஆற்றுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம்மவரை அவர்கள் அடித்தால், திருப்பி அடிப்பதில் தவறேதும் இல்லை. அது எல்லா உயிரினங்களுக்கும் உள்ள இயல்புணர்ச்சிதான். புழுகூட சீண்டுபவரைத் தலைதூக்கி நோக்கும். பாம்புகள் தீண்டும், தேள் என்றால் கொட்டும், எறும்பெனில் கடிக்கும், தேனீக்களோ கூட்டமாகக் கடித்து கொலையே செய்யும். ஆகையால், திருப்பித் தாக்குதல் தவறல்ல.

பாம்புகளும் எறும்புகளும் மனிதர்களின் தாக்குதலுக்கு முன் வலுவிழக்கின்றன என்பதையும் இங்கே புரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், மனிதர்கள் அவ்வுயிரினங்கலின் இயல்புகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். விளைவாக, அந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறைகிறது அல்லது அவை இடமாற்றம் செய்துவிடுகின்றன.

காவிரி நீருக்காக நடக்கும் அட்டூழியங்கள் அல்ல, இப்போது நிகழ்பவை. காவிரியின் பேரால் ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்படுகிறது. பெங்களூருவில் குடியேறியுள்ள அயல் மொழியினரை, குறிப்பாகத் தமிழர்களை அப்புறப்படுத்தும் நோக்கம்தான் இதில் முதன்மையானது.
தமிழக – கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள மற்ற ஊர்களில் இவ்வளவு வன்முறைகள் அரங்கேற்றப்படவில்லை. குறிப்பாக, ஆசனூர் – சாம்ராஜ் நகர் மலைப் பகுதிகளிலும், மாதேஸ்வரன் மலை – கொளத்தூர் வனச் சாலை கிராமங்களிலும் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். கன்னடர் எவர் தமிழர் எவர் என்று எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் இரு இனத்தவரும் கலந்திருக்கின்றனர். அங்கெல்லாம் எவரும் நிர்வாணப்படுத்தப்படவில்லை, வாகனங்கள் கொளுத்தப்படவில்லை. இவைபோன்ற எல்லைப் பகுதிகள் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இரு இனத்தவரையும் தாங்கிக்கொண்டு விரிந்துள்ளன.

பெங்களூருவில் மட்டும் ஏன் இவ்வளவு வன்முறைகள் என்றால், தமிழர்களின் மீது கன்னடர்களுக்கு உருவாகியுள்ள ஆவேசம், பெங்களூருவை மையமாகக் கொண்டது. கர்நாடகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக கன்னட இனவெறி, அரசியல் வடிவம் அடைந்துள்ளது. வாட்டாள் நாகராஜ் போன்ற சிலர் இந்த இனவெறியைப் பொறுக்கித்தனமான அரசியலாக மாற்றி வைத்துள்ளனர். இந்தத் தலைவர்களைக் கன்னட மக்கள் மதிக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

வாட்டாள் நாகராஜ் தேர்தலில் நின்று படுதோல்வி அடைந்தவர்தான். அவரது அமைப்பு மக்கள் செல்வாக்கு மிகுந்த அமைப்பல்ல, ஊடகச் செல்வாக்கும் பெரும்புள்ளிகளின் கள்ளத் தொடர்பும் கொண்ட அடியாள் அமைப்பு அது.
’தங்களுக்குச் சொந்தமான காவிரியைத் தமிழர்கள் பறிக்கிறார்கள்’ என்ற பொய்யைக் கன்னட இனவெறியர்கள் மிகவும் ஆழமாக அச்சமூகத்தில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். காவிரி என்பது இயற்கையாக ஓடும் நதி. அது பல்லாயிரம் ஆண்டுகால நிலவமைப்பு வரலாற்றைக்கொண்டுள்ளது. அரசியல் காரணங்களாலும், இன அடிப்படையிலும் தமிழகம் – கர்நாடகம் என்ற பகுப்பு உருவான பின்னர், காவிரி எனும் இயற்கை அங்கத்தினால் தனது போக்கினை மாற்றிக்கொள்ள முடியாது. நதி எப்போது நதிதான். அரசியல் எல்லைகள் மாறினாலும் மனிதர்களே இல்லாமல் அனைவரும் செத்தொழிந்தாலும் நதி எப்போதும் நதிதான்.

தமிழர்களின் வரலாற்றில் காவிரிக்கு உள்ள உறவு, அன்னைக்கும் பிள்ளைக்குமானது. இதே காவிரிதான் இப்போதைய கன்னடர்களுக்கும் அன்னை. இந்தக் கன்னடர்கள் ஒருகாலத்தில் தமிழராக இருந்த இனத்தவர்தான். எருமையூர் என்று சங்க இலக்கியங்கள் அழைக்கும் ஊர்தான் வடமொழியில் மகிஷவூர் என்றாகி, மைசூர் என இப்போது வழங்கப்படுகிறது. குடகுதான் கூர்க் ஆகியது. தமிழின் ஒருகிளைதான் கன்னடம் ஆகியது.
கர்நாடகத்தில் காவிரியைப் பற்றி பரப்பப்படும் செய்திகளில் உள்ள அழுத்தமும் ஆவேசமும் தமிழகத்தில் இருப்பதில்லை. மனதைத் தொட்டுக் கூறுங்கள், உங்கள் குழந்தைகளில் எத்தனைப் பேருக்கு சிலப்பதிகாரத்தில் உள்ள காவிரி விவரணை தெரியும். எத்தனைக் குழந்தைகளுக்குக் காவிரி உற்பத்தி ஆகும் இடம் தெரியும்? காவிரியின் போக்கு, இயல்பு, பருவமழைக் காலம், காவிரிக் கரையில் உள்ள ஊர்கள், விளைவிக்கப்படும் பயிர்கள், கடலில் அது கலக்கும் இடம் என இப்போதைய குழந்தைகளுக்குத் தெரியாத நதிதான் காவிரி.

வாட்டாள் நாகராஜ் அல்லது வேறு ஓர் இனவெறியர் ‘காவிரி எங்கள் தாய்’ என முழங்கினால், ‘ஆம் அவள் எங்கள் தாய்தான்’ என முழங்க அங்கே இலட்சக் கணக்கான குரல்கள் இருக்கின்றன. இங்கே காவிரியைப் பற்றிப் பேசப்படும் கூட்டங்களில் கூட்டம் கூடுவதில்லை, பாடங்களில் காவிரியின் முழுமை இல்லை, தமிழர்களின் வாழ்வில் இப்போது காவிரியே தேவையில்லை.
இப்போதைய தலைமுறைக்குக் காவிரி என்ற பேர் மிகவும் அந்நியமானது. நான் மிகுந்த வேதனையுடன் கூற விரும்பும் சேதி, ‘கன்னடர்கள் மட்டும் அடிக்காமல் இருந்தால் இங்குள்ள தமிழர்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் காவிரி எனும் பெயரே மறந்துபோகும்’ என்பதுதான்.

நாம் நமது வரலாற்றைப் படிப்பதில்லை, நமது மொழியைக் கற்பதில்லை, நமக்கான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில்லை. வரலாற்றை நிராகரிக்கும் எவரும் கோழைத்தனமாக அழிய வேண்டி இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஈழப் போரில் மக்கள் அழிந்துகொண்டிருந்தபோது, பல்லாயிரம் பேரோடு நானும் ஊர் ஊராகச் சென்று போருக்கு எதிராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் சந்தித்த மக்களில் பெரும்பாலானோர், ‘இங்கிருந்து பிழைக்கப்போனவர்களுக்கு இலங்கையில் எதற்குத் தனிநாடு?’ எனக் கேட்டனர். ஈழம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் தமிழர் நாடு என்ற வரலாறு கூட இங்கே மக்களிடம் பரப்பப்படவில்லை என்பதை அறிந்துகொண்டபோது, அங்கே எல்லாம் முடிந்துபோயிருந்தது.

காவிரியைப் பற்றிய வரலாறு, இயற்கையியல் மற்றும் அரசியல் நமது தலைமுறைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். காவிரியை நமது அன்னையாகப் பார்க்கும் மனம் நமக்கு வேண்டும். நம் பிள்ளைகள் காவிரியையும் இன்னபிற நதிகளையும் வணங்க வேண்டும்.

இயற்கையின் கொடைகளை வணங்கி வரவேற்பதுதான் காலம் காலமாக மனித சமூகத்தில் இருந்துவரும் மரபு. தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ள போலித்தனமான பகுத்தறிவுச் சிந்தனை நதியை வெறும் ‘விவசாய ஆதாரமாக’ப் பார்க்கக் கற்றுத் தந்துள்ளது.

’காவிரி நீர் இல்லாவிட்டால், காவிரி டெல்டாவில் வேளாண் உற்பத்தி இருக்காது’ என்று வாசிக்கப்படும் செய்தியைக்கேட்டு வெறுத்துப் போனவன் நான்.

’இன்றைக்கு அம்மா வராவிட்டால், வீட்டில் இரவு சாப்பாடு கிடைக்காது. அப்பா வராவிட்டால், செலவுக்குப் பணம் இருக்காது, மனைவி வராவிட்டால் துணிகளைத் துவைக்க முடியாது’ என்று சிந்திப்பது எவ்வளவு இழிவானதோ அதைப் போலத்தான், ‘காவிரி நீர் வராவிட்டால் டெல்டா விவசாயம் நடக்காது’ என்பதும்.

‘காவிரியின் ஓட்டம் தடைபட்டால் எங்கள் நிலத்தில் இரத்த ஓட்டம் நின்றதுபோல் நாங்கள் வருந்துவோம்’ என்ற சிந்தனைதான் இயற்கையின் பிள்ளைகளின் மனதில் இருக்க வேண்டியது. இந்தச் சிந்தனை இல்லாத காரணத்தினால்தான், அன்னை காவிரியில் நிகழும் மணல் கொள்ளையை அனுமதிக்கிறோம், அவள் மீது நச்சுக் கழிவுகள் கலப்பதை அனுமதிக்கிறோம்.
காவிரியை நமது நிலத்தின் இரத்த நாளமாகப் பார்க்கும்வரை, எந்த அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில், கன்னடர்கள் காவிரையைத் தங்கள் தெய்வமாகத்தான் கருதுகிறார்கள்.

நேர்மையற்ற அரசியலில் காவிரி அன்னை சிக்கியிருக்கிறாள். கர்நாடக அரசியலில் காவிரி, தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான எளிய கருவி. தமிழக அரசியலில் காவிரி என்பது வெறும் விவசாயிகளின் பிரச்சினை. அதிலும் ’டெல்டா விவசாயிகளின்’ பிரச்சினை. இவை இரண்டும் சுயநலம் மிக்க சூதுகள்.

இப்போது அவர்கள் நம்மை அடிக்கிறார்கள். அவர்களை நம்மாலும் அடிக்க முடியும். ஆனால், இவை இரண்டும் தீர்வுகளை நோக்கி நகர்த்தப் போவதில்லை. ஏனெனில், இவை இரண்டுமே அடிப்படைச் சிக்கலுக்கான ‘எதிர்வினைகள்’தானே தவிர, ‘மறுவினைகள்’ அல்ல.

காவிரி அன்னையை மனதளவில் வணங்குங்கள். காவிரிக்காக இதுவரை நிகழ்ந்துள்ள போராட்டங்கள், செயல்பாடுகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கவனத்திற்கு வராமல், காவிரியின் உரிமைகளுக்காகப் போராடி மடிந்தோர் எண்ணற்றோர். இப்போதும் காவிரிக்காக குடும்பத்தை நிராகரித்து விட்டு வீதி வீதியாக அலைவோர் இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் அறிந்துகொள்ளுங்கள்.

காவிரி மட்டுமல்ல, நமது அனைத்து இயற்கை வளங்களும் பறிக்கப்படுகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இயற்கை வளங்களின் மீது தெய்வ பக்தி இல்லாமல் போனால் அவற்றைப் பறிகொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
காவிரி நதியைப் பாதுகாக்கும் திறன் இல்லாத வெற்றுக் கூச்சல் கூட்டமாக ஒட்டுமொத்தத் தமிழரும் மாற்றப்பட்டுள்ளனர் என்பது வெட்கக்கேடான உண்மைதான். ஆனால், இந்த நிலை மாறும். நம்மால் இந்த நிலையிலிருந்து மீண்டெழ இயலும்.

சொந்த மொழியின் மீதும், நிலத்தின் மீதும் ஆழ்ந்த அன்புகொண்ட எவரையும் படைத்தவர் பாதுகாக்கிறார்.

நாம் நமது மொழியை, இயற்கை வளங்களை, வரலாற்றை நேசிப்போம். காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டதுதான் அன்பு.

ஒரு நதியை நேசிப்பதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. மலையை, மரத்தை, பசுவை, காளையை, பன்றியை நேசிப்பதற்குக் காரணம் தேவையில்லை. எந்தச் சூழலில் படைக்கப்பட்டோமோ அந்தச் சுழலில் உள்ள அனைத்தும் நம் அங்கங்கள்தான். அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்குண்டு. இது அரசியல் அல்ல, அறவியல்.

எதிர்வினை ஆற்றுவது மிக எளிதானது. ’அவர் திட்டினால், நீயும் வசைபாடு, அவர் அடித்தால் நீயும் அடி, அவர் துப்பினால் நீயும் துப்பு’ என்பதுதான் எதிர்வினையின் மந்திரம். அரசியல்வாதிகள், திரைப்பட வணிகர்கள், மணல்கொள்ளையர் மற்றும் வேறுபல துறையினருக்கும் இதுதான் வசதியான மந்திரம். இந்த மந்திரத்தை ஓதித்தான் அவர்கள் காவிரியை நம்மிடமிருந்து பிரித்தார்கள்.

காவிரியில் நீர் பெருகினால், மணல் கொள்ளை நிகழாது என்பதற்காக நீர் வரத்துக்கு எதிராகச் சிந்தித்துச் செயல்படுவோர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள்தான் பெரும்பாலான தலைவர்களுக்கு ’ஊட்டச் சத்து’ ஊட்டுகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

நிரந்தரமாக இந்த சிக்கல் தீர்வதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற பெரும்புள்ளிகளுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. ஈரோடு, கரூர் பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளுக்குக் காவிரி நீரோட்டம் மிகப் பெரிய தொல்லை. இன்னும் ஏராளமான பேராசை வெறியர்கள் தமிழகத்தில் காவிரிக்கு எதிராகச் சிந்தித்துச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
காவிரியின் மீதான அன்பும் அக்கறையும் எளிய மனிதர்களான நமக்கு வேண்டும்.

இந்தப் புரிதல்களுடன் நாம் மறுவினையாற்றத் துவங்குவோம். சில முன்னெடுப்புச் செயல்பாடுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. சங்ககாலத்திலிருந்து இன்றுவரையிலான காவிரி வரலாற்றை அறிந்துகொள்ளுங்கள்.

2. காவிரி நதிக்காகப் போராடியோரைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தகவல்களை எல்லாம் செம்மை சமூகத்தின் வழியாக உங்களிடம் சேர்ப்பிப்பது என் கடமை.

3. காவிரி நதியின் மீது தமிழகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுங்கள் எழுதுங்கள்.

4. காவிரி உற்பத்தியாகும் குடகுமலைக்குச் சென்று பார்ப்பதைக் கடமையாகக் கொள்ளுங்கள். காவிரி ஓட்டத்தின் பாதை நெடுகிலும் பயணம் செய்யுங்கள்.

5. குழந்தைகளுக்கு காவிரியை முறையாக, முழுமையாக அறிமுகம் செய்யுங்கள்.

6. ’காவிரி நதி என் அன்னை’ என்ற முழக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலதிலும் பதித்துப் பரப்புங்கள்.

7. பெங்களூருவில் பணியாற்றும் தமிழர்கள், அந்த ஊரைச் சீரழிக்காத வகையில் நடந்துகொள்ளுங்கள். குறிப்பாக, உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்காமல் வாழுங்கள்.

 உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக அயலவர் மீது தாக்குதல் நடத்தும் வழக்கம் புவியெங்கும் வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது.

இப்பணிகளை நாம் செய்யத் துவங்கினால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து, ‘காவிரி நதியின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட’ பெரும் கூட்டம் தமிழகத்தில் இருக்கும். அப்போது காவிரி அன்னையை எவரும் தடுக்கத் துணிய மாட்டார்கள். மிக முக்கியமாக, ‘காவிரியைப் பாதுகாத்துக்கொடுங்கள்’ என எந்தத் தலைவரிடமும் நமது சமூகம் நின்றுகொண்டிருக்காது. ஏனெனில், மக்கள்தான் தலைமையை உருவாக்குகிறார்கள். சமூகம் விழிப்படைந்தால், தலைமைகள் மாறிவிடும்.

அவ்வப்போது நிகழும் சிக்கல்களுக்கு எதிர்வினையாற்றிவிட்டு, அடுத்த சிக்கலுக்குத் தாவிக்கொண்டிருப்பது இப்போதைய சமூகத்தின் கேடுகெட்ட வழக்கம். எதிர்வினைகளை எல்லாம் வரம்புக்குள் வைக்க வேண்டும்.
காவிரி மட்டுமல்ல நமது அனைத்து மரபு உரிமைகளையும் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது, ‘மறுவினையாற்றுதல்’தான்.

இணைப்புப் படம்: Paul Gregory

காளியாகிய நெருப்பைச் சுவைத்தபோது இது நிகழ்ந்தது…!

காளியாகிய நெருப்பைச் சுவைத்தபோது இது நிகழ்ந்தது…!
ம.செந்தமிழன்
 -

அமாவாசைக்கு மறுநாள் இரவில் அந்த மலை அடிவாரத்தில் அவன் அமந்திருந்தான். பாறை ஒன்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவாறு, மலைக் காட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த இருளிலும் அவனது நிழல் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தது. இருளில் மலைக்காட்டின் அழகு, மயிர்க்கால்களை எழும்பச் செய்தது. எந்த அழகையும் ஆழமாக உணர வேண்டுமானால், கண்களை மூடிக்கொள்வது அவன் வழக்கம். எந்த உரையாடலும் சிறக்க வேண்டுமானால், வாயை மூடிக்கொள்வதும், நற்சொற்களைக் கேட்க விரும்பினால் செவிகளைச் சாத்திக்கொள்வதும், நல்லாற்றல் கிடைக்க வேண்டுமானால் பட்டினியாகக் 8கிடப்பதும் கூட அவன் வழக்கங்கள். அதாவது அவன் ஒரு மூடன்.

மூடன் என்பதால் அவனது நிழலுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஏனெனில், நிழலுக்கு வெளிச்சம் ஆகாது. நிழலுக்கு தர்க்கம் பிடிக்காது. தர்க்கம் பேசுவோர் நிழலைத் துரத்திவிடுகிறார்கள் அல்லவா. நீங்கள் கூட உங்கள் வாழ்விடத்தைக் கவனியுங்கள். நிழல் விழாதவகையில் மிகை வெளிச்சத்தைத்தான் பரவச் செய்கிறீர்கள். எல்லா இரவுகளும் விளக்குகளால் சீரழிகின்றன. நவீன மனிதர்கள் நடமாடும் எல்லாக் காடுகளும் இரவை இழக்கின்றன. மின்மினிப் பூச்சி இனமே உங்கள் வாழ்விடங்களில் அழிந்துவிட்டது. அந்தளவுக்கு வெளிச்சத்தின் மீது பற்றுகொள்கிறீர்கள்.
இந்த மூடனது நிழல் இருளை விரும்பும். வானிலிருந்து கசியும் வெளிச்சமே எல்லா இரவுகளுக்கும் போதுமானது என்பது அந்த மூடன் கருத்து. இதுவே நிழலுக்கும் அவனுக்குமான பிணைப்பு.

விண்மீன்கள் கசியவிட்ட நுண் வெளிச்சத்தில் மலைக் காடு வனப்பாகக் காட்சியளித்தது. மலையின் உச்சியில் தெரிந்த ஒற்றைப் பாறையில் இரு கண்கள் தெரிந்தன. அக்கண்கள் மூடனை உற்றுப் பார்த்தன. அவன்தான் கண்களை மூடிக்கொண்டிருக்கிறானே, அதனால் அவனுக்கு இந்தக் காட்சி மிகத் தெளிவாகத் தெரிந்தது.

கண்கள் திறந்த அப்பாறையின் கீழே மேலும் இரு பாறைகள் இருந்தன. அப்பாறைகளின் இடுக்குகள் வழியாக மழைநீர் வழிந்துகொண்டிருந்தது. இந்த இரு பாறைகளும் பெரிய முலைகளாகின. இன்னும் சற்று கீழே மலையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அதற்கும் கீழே விவரிக்கவியலாத மரங்களும் புல்வெளிகளும் இருந்தன.

மூடன் விழிகளை மேலும் இறுக்கிகொண்டான்.

மலை அடிவாரத்தில் அவன் உட்கார்ந்திருந்த பாறையே இரண்டு பாதங்களின் வடிவம்தான் என்பதைக் கடைசியாக அறிந்துகொண்டான். பாதம் அசைந்தது. இவனும் அசைந்தான் நிழலும் அசைந்தது. மலைக் காட்டின் பக்கவாட்டுப் பகுதிகளில் தெரிந்த ஓடைகள் இரண்டும் கரங்களாகின. மூடனும் நிழலும் இடது பாதத்தில் அமர்ந்திருந்தனர்.

மூடனது அகவெளி விரியத் துவங்கியது. மலைக்காடு தேவியானது. தேவி, அன்னை, காளி போன்ற பல்வேறு பெயர்களால் அவளை அழைப்பது மூடன் வழக்கம்.

எல்லாச் சொற்களும் ஒரு பொருளைக் குறிப்பவைதான் என அவன் நம்பினான்.

தேவி எழுந்து நின்றாள். பாதத்திலிருந்து மூடனும் நிழலும் இறங்கினார்கள். மூடன் தேவியை நோக்கி ஆர்ப்பரித்தான். தேவியாகிய அன்னை மூடனை நோக்கி ஆடினாள். மலைக்காடு நிமிர்ந்து எழுந்து ஆட்டமாக ஆடியதைக் கண்ட நிழல், தானும் ஆடியது. மூவரும் இணைந்து தாண்டவமாடினர். தேவியின் முலைகளில் வழிந்த நீரோடைகள் பால் ஊற்றுகளாகத் தெரிந்தன. ஆடிய ஆட்டத்தில் பால் தெளித்து மூடனை நனைத்தது.

தேவி மூடனைத் தன் விரலால் தூக்கி மார்பில் சாய்த்தாள். அவனோ மார்பின் பள்ளம் வழியாக சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து எழுந்து ஆடினான். நிழல், தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் ஓடியாடியது.

’அன்னையே உன் மீது நான் படர்வது நியாயமா?’ என மூடன் கேட்டான்.
’எல்லாப் பிள்ளைகளையும் நான் என்மீதுதான் படரவிடுகிறேன்’ என்றாள் அன்னை.

’அன்னைக்கும் பிள்ளைக்கும் மரியாதைக்குரிய இடைவெளி வேண்டாமா?’ என்றான் அவன்.

‘மரியாதை இருக்குமிடத்தில்தான் இடைவெளி இருக்கும். நமக்குள் இடைவெளி தேவையில்லை’ என்றாள் அவள்.

’நான் மலைக்காட்டினைக் காண வந்தேன். நீ இங்கே தோன்றியதேன்?’ எனக் கேட்டான் மூடன்.

’என் படைப்பில் எதைக் கண்டாலும் அதில் எனைத்தான் காண்பாய்’ என்றாள் தேவி.

‘இங்கே மலைகளையும் காடுகளையும் அழிக்கிறார்களே…அவர்கள் உன்னை அழிப்பதாக அர்த்தமா?’ எனக் கேட்டான் மூடன்.

‘தலை மயிரை வெட்டினால் மயிருக்கு இழப்பென்ன? விரலை வெட்டினால் விரலுக்கு இழப்பென்ன? ஆண் குறியை வெட்டினால் குறிக்கு இழப்பென்ன? முலைகளை அறுத்தெறிந்தால் அவற்றுக்கு இழப்பென்ன? மலைகளை வனங்களை அழித்தால் எனக்கு இழப்பென்ன?’ எனக் கேட்டாள் தேவி.

’என் சந்ததிக்கு மலைகளும் காடுகளும் இருக்க வேண்டாமா?’ என மூடன் கேட்டான்.

நிழல் உரக்கச் சிரித்துக் கத்தியது, ‘இதோ இந்த மூடனுக்கே அடுத்த வேளை உணவு எவர் வீட்டில் எனத் தெரியாது. இவன் சந்ததிக்காகப் பேசுகிறான்’ என்றது நிழல். பின்னர் அதுவே கூறியது, ‘அதனால்தான் நான் இவன் நிழலாக இருக்கிறேன். எப்போதும் மூடர்களின் நிழலாக இருப்பது சரியானது. அறிவாளிகளோ வெளிச்சத்தை நாடுவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்’ என்றது நிழல்.

’சந்ததிக்குக் காடுகள் வேண்டும்’ என மூடன் கேட்டதும், தேவியின் உருவம் வேறு விதமாக மாறியது. இப்போது அவள் காளி ஆனாள். உற்சாகத் தாண்டவம் மாறிப்போனது. அவளது அசைவுகளில் தீப்பொறிகள் தெறித்தன. அப்பொறிகளில் சில மரங்கள் சடசடத்து எரிந்தன.

மூடனைப் பார்த்து காளி கூறினாள், ‘சந்ததிக்கு வாழ்க்கை வேண்டும் என நீ உண்மையிலேயே விரும்புகிறாயா? அப்படியானால், நெருப்பைப் பற்றிக்கொள்’

‘நெருப்பா…? அது ஆபத்தான பூதமாயிற்றே…’ என்றான் மூடன். வான் அதிரும்படியாகக் கூக்குரலிட்டுப் பேசினாள் காளி, ‘இந்தக் காடு நெருப்பில்தான் பிறந்தது. மரங்களும் பறவைகளும் நெருப்பில்தான் பிறந்தன. என் தலைவனுடைய நீரும் என்னுடைய நெருப்பும் புணர்ந்துதான் உங்களைப் படைத்தோம். ஆகவே, நெருப்பை நீயும் பற்றிக்கொள்’ என்றாள் அவள்.
’நெருப்பு என்னைச் சுடாதா?’ எனக் கேட்டான்.

‘நெருப்பு தன்னை விட்டு விலகுவோரைச் சுடும். உள்ளிருப்போரை வடிவமைக்கும். இந்த பூமியின் உள்ளிருப்பது நெருப்புதான். நெருப்புதான் பூமியின் வடிவத்தைக் காப்பாற்றிக்கொண்டுள்ளது. நெருப்பை வயிற்றுக்குள் வைத்திருக்கும் நிலம் நிம்மதியாக இருக்கும். நெருப்பிலிருந்து விலகி நிற்கும் மரங்கள் நெருப்பில் அழியும். நீ உள்ளே வந்துவிடு, உன் வடிவம் வலுவடையும்’ என்றாள் காளி.

’அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?’ என மூடன் கேட்டான்.

‘நீ நெருப்பின் வயிற்றுக்குள் வந்துவிட்டால், நீ எரிக்கத் துவங்குவாய். இங்கே உயிர்கள் வாழும் சூழல் நிலைபெற வேண்டுமென்ற உன் வேட்கையின் வெப்பம் பிசாசுகளின் உடலைப் பொசுக்கும். மேலும் பலரை நீ நெருப்புக்குள் குடியமரச் செய்வாய்.

என் தலைவனுக்கு புழுவும் மனிதரும் ஒன்றுதான். அவர் எல்லாவற்றையும் உயிர்களாகப் பார்க்கிறார். புழு அழிந்தாலும் அது வேறு வடிவத்தை அடைகிறது. அதன் உயிர் அழிவதில்லை. அதேபோல மனிதர்கள் அழிந்தாலும் என் தலைவனுக்குக் கவலை இல்லை. ஏனெனில், அவருக்கு உயிர்கள் போதும். நான் உருவத்தைச் சுமப்பவள்.

எனக்குப் புழுக்கள் புழுக்களாக வாழ வேண்டும். மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும். எனது உணர்ச்சிகளை, உறவுகளின் மீதான பற்றுதலை எல்லா உயிரினங்களிலும் பெண்மைக்குக் கொடுத்தேன். எல்லாப் பெண்களுக்கும் உறவுகள் மேன்மையானவை. நெருப்பின் வயிற்றில் நுழைந்த பின்னர், நீயும் பெண்ணாகிறாய். வா…வந்து தீயாகுவாய்’ என்றாள் காளி.
மூடன் எழுந்து காளியின் நாக்கில் எரிந்த நெருப்பை நக்கினான். இவனது நாக்கும் கொழுந்துவிட்டெரிந்தது. அந்தக் கொழுந்தின் ஒரு பகுதியை நிழலுக்கு நீட்டினான். நிழலும் தீயைச் சுவைத்தது.

காளியும் இவர்கள் இருவரும் இணைந்து நெருப்பாட்டம் ஆடிக் களித்தனர்.
நீரையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் நெருப்பு தேவை என்பதை இந்தத் தாண்டவம் உறுதிப்படுத்தியது. அதன் பின்னர் மூடனும் நிழலும் தங்கள் சமூகத்தில் தீக் கங்குகளைப் பரிசளித்தனர்.

அக்கங்குகளை அணைக்காமல் வளர்த்தவர்களில் பெரும்பகுதியினர் பெண்களாக இருந்தனர் அல்லது ஆணாகப் பிறந்தும் பெண்மையின் மேன்மையை உணர்ந்தவர்களாக இருந்தனர்.

இணைப்புப் படம்: Paul Gregory
 

நின் வினைகள் போற்றி!

நின் வினைகள் போற்றி!
ம.செந்தமிழன்

1.
இல்லை என்போருக்கு இல்லாமல் போகிறாய்
உண்டு என்போரின் உடன் உறைகிறாய்
நின் அருமை போற்றி!
கேள்விகள் கேட்போருக்கு பதில் அளிக்கிறாய்
சரணடைவோருக்கோ தீர்வுகளைத் தருகிறாய்
நின் பெருமை போற்றி!
அறிவை நாடுவோரை வேடிக்கை பார்க்கிறாய்
அருள் நாடுவோரின் உள் நுழைகிறாய்
நின் பேதம் போற்றி!
பெண்மையைப் பழிக்கும் கூட்டங்களின்
பெண்களை ஆண்மையாக்கினாய்
பெண்மை மதிப்போருக்கு
அண்மையில் நின்றாய்
நின் பாதம் போற்றி!
மலம் அள்ளுதல் இழிவென்ற சமூகத்தின்
இல்லத்தினுள் மலவறை வைத்தாய்
அவமல்ல எத்தொழிலும் என்போருக்கு
எவ்விடமும் தூய்மை செய்தாய்
நின் வினைகள் போற்றி!
பிறவியில் பேதம் காண்போர்
பிறவியில் வாதம் வைத்தாய்
அறவினை மட்டும் செய்வோர்
உறவினை மேன்மை செய்தாய்
நின் சினங்கள் போற்றி!

…………………………………………………………
2.
சமைத்தல் இழிவென்போர்
பெண்ணைப் பிரிதல் காண்கிறேன்
எப்பணியும் எமதே என்போர்
இணைந்து களித்தல் காண்கிறேன்
நோய்கள் உண்டென்போர்
அலைந்து திரிதல் காண்கிறேன்
படைப்பில் நோயிருக்காதென்போர்
மகிழ்ந்து துளிர்த்தல் காண்கிறேன்
அறிவே இறுதி என்போர்
அறிவால் அழிதல் காண்கிறேன்
மனமே அறுதி என்போர்
பரத்தில் பறக்கக் காண்கிறேன்
செல்வம் காக்கும் என்போரின்
செல்வத்தை நோய் அழிக்க
கர்வம் காக்கும் என்போரின்
கர்வத்தைக் கடன் அழிக்க
அதிகாரம் காக்கும் என்போரின்
அதிகாரத்தைப் பகை அழிக்க
அறிவே காக்கும் என்போரின்
அறிவைச் சூது அழிக்க
புகழே காக்கும் என்போரின்
புகழை விதி அழிக்க
படைப்பே எனைக் காக்கும் என்போரைப்
படைப்பே நீ காக்க!

…………….
3.
அடைத்தால் பெருஞ்செல்வம்
உடைத்தால் மண்கலயம்
நடத்தும் வாழ்க்கையெல்லாம்
துடைக்கும் வன்மை உனது!
உணர்ந்தால் உயிர் நனிகொள்ளும்
துறந்தால் மயிர் நுனியும் கொல்லும்!
(நனி – மிகுதி. உயிர் நனி கொள்ளும் – உயிர் தனது மிகுதியான வாழ்வை வாழும்)
இணைப்புப் படம்: Paul Gregory


Published on : 18/010/2016

 

தாகம் தணிக்க வாரீர்!

தாகம் தணிக்க வாரீர்!

ம.செந்தமிழன்


சேறும் சகதியுமாகக் கலங்கிக் கிடக்கும் நீரைப் பருகுவதற்காக, காத்து நிற்கும் குழந்தைகளை நேரில் கண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
இருபது அடி ஆழத்திற்குக் குழி வெட்டி, அதன் கீழே சொட்டு சொட்டாக ஊறிவரும் உப்பு நீரை வரிசையில் நின்று இறைத்துச் செல்லும் மனிதர்களைக் காணும்போது, உங்கள் மனம் என்ன சொல்லும்?
எப்போதாவது ஒருமுறை ஊருக்குள் வந்து செல்லும் குடிநீர் விற்பனை வாகனத்தைக் கண்டதும், கூட்டம் கூட்டமாக ஓடிச் சென்று மோதும் மக்களைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள்?
ஒரு குடம் குடிநீர் ஐந்து ரூபாய் விலைக்கு விற்கப்படுவதையும், அந்த நீரும் மணல் வாடையுடன் கலங்கி இருப்பதையும் நேரில் பார்க்கையில் உங்கள் மனசாட்சி எப்படித் துடிக்கும்?
இந்த மக்கள் வாழும் நிலம் நிலம் யாவும் சீமைக் கருவேல மரங்கள் பல்கிப் பெருகிவிட்டதையும், அங்கே இருந்த இயற்கையான புதர்ச் செடிகள் அழிந்தே போய்விட்டதையும் காணும்போது உங்கள் சிந்தையில் எவ்வளவு ஆவேசம் தோன்றும்?

சாக்கடைபோல் தேங்கிக் கிடக்கும் சேற்று நீரில், மயில்கள் நீர் பருகுவதைக் காணும் அவலம் உங்களுக்கு வேண்டாம். நேற்று அந்த அவலத்தையும் நாங்கள் கண்டோம்.
மயில்களின் அழகும் கம்பீரமும் அவற்றை தெய்வத்தின் வாகனமாகச் சித்தரிக்க வைத்தவை. மயில்களைக் கண்டால் பரவசமடைந்து வணங்கும் மனிதர்கள் வாழும் மண் இது. இந்த நிலத்தின் ஒருபகுதியில் மயில் குஞ்சுகள் சீமைக் கருவேல முட்களின் ஊடாக தத்தித் தத்தி வசிக்கின்றன. வயல்களில் பொறுக்குவதற்குக் கூட புழு பூச்சிகள் இல்லை. கொஞ்சமாவது, ஈரம் மண்ணில் இருந்தால்தானே புழுக்கள் வாழும்!

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், மழை வரும் என்ற நம்பிக்கையில், வயல்களில் விதை தூவி விடுவார்கள். அதன் பின்னர் வரும் மழையில்தான் நெற்பயிர்கள் முளைக்கும். மழைக்குப் பின் விதைப்பவர்களை அறிந்திருப்பீர்கள். மழைக்கும் முன் விதைப்பவர்களை அங்கு நாங்கள் கண்டோம்.
இம்முறை, இதுவரை மூன்று முறை விதைக்கப்பட்டுவிட்டது. ஒருமுறையும் மழை வரவில்லை. வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. எல்லா வயல்களிலும் நெல் விதைகள் உயிர் நீருக்காகக் காத்துக் கிடக்கின்றன. சீமைக் கருவேல மரங்களோ மீதமிருக்கும் ஈரத்தையும் உறிஞ்சி செழிக்கின்றன.

இணைப்பில் உள்ள முதல் படத்தைப் பாருங்கள். ஒரு குழியில் சிறிதளவு நீர் ஊறுகிறது. மக்கள் அந்த நீரைச் சேறுடன் இறைக்கிறார்கள். அதுதான் அவர்களின் ஒரே குடிநீர் ஆதாரம். அந்தக் குழிக்குள் சீமைக் கருவேல மரத்தின் வேர்கள் நீண்டு கொண்டுள்ளன. தாகம் தணிக்க ஊறும் அந்தக் கலங்கிய நீரை உறிஞ்சுவதிலும் சீமைக் கருவேல மரங்கள் முந்துகின்றன.

நேற்று நானும் கலாநிதியும் அப்பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். இன்னும் ஒரு வாரத்தில் பணிகளைத் துவக்க இருக்கிறோம்.

’இராமநாதபுரம் பகுதிகளில் நல்ல மழை பெய்யட்டும்’ என வேண்டுங்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையெனில், ‘அங்கே நல்ல மழை பெய்ய வேண்டும்’ என மனதால் விரும்புங்கள். எல்லாம் ஒன்றுதான்.

நாம் ஒன்றிணைந்து அம்மக்களில் சிலருக்கேனும் நல்ல குடிநீரை உறுதி செய்ய வேண்டும். அந்நீரை அவர்கள் சுகமாகப் பருக வேண்டும். அக்காட்சியைக் காண்பதில் நான் பெருவிருப்பத்துடன் இருக்கிறேன். என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் என் இறை, இவ்விருப்பத்தையும் நிறைவேற்றட்டும்!

இப்போது பெய்யப் போகும் மழையைச் சேகரித்து, வெகு சிலருக்காவது குடிநீராக மாற்றித் தர செம்மை அகல் திட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
.............................

இராமநாதபுரம் பணிகளுக்கென நன்கொடையைப் பணமாக அனுப்ப வேண்டாம். எந்த வங்கிக் கணக்கையும் நாங்கள் முன்வைக்கவில்லை. இப்பணியில் ஈடுபட விரும்புவோர் செய்ய வேண்டியவை:

1. முதலில் உங்களைத் தன்னார்வராக இணைத்துக்கொள்ளுங்கள்.

2. எந்தக் காலகட்டத்தில் பணிகள் நடக்கும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பார்கள். அந்தக் காலத்தில் எத்தனை நாட்கள் உங்களால் அங்கு வர முடியும் என்பதைத் தெரிவியுங்கள்.

3. பணிகள் நிகழும் கிராமத்திற்கு வந்து ஓரிரு நாட்களாவது தங்கி பணியாற்றுங்கள்.

4. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை நீங்கள் வரும்போது தெரிவிப்போம். அவற்றுக்கான தொகையை அங்கே வந்து செலுத்துங்கள். அல்லது நீங்களே பொருட்களை வாங்கி அனுப்புங்கள்.

5. நேரில் வரவே இயலாதவர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி, தேவையான பொருட்களை வாங்கித் தருவதற்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.
6. இயன்றவரைக்கும் களப்பணியாற்ற முன்வாருங்கள்.

இம்மழைக்காலத்திற்குப் பின்னர் நாம் பணியாற்றும் கிராம மக்கள், குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் நிம்மதியாக தாகம் தணிக்க இணைவோம் வாருங்கள்.
செம்மை அகல் பணிகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், இத்திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு வேறுபல அறச் சிந்தனையாளர்களும் இக்களத்தில் இறங்க வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் ஒன்றுகூடினால், வறட்சியில் வாடும் உயிர்களுக்கு மழைநீர் வார்க்க முடியும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
இராஜேஸ்வர்: 97915 12095
பாலாஜி: 96770 73007
https://www.facebook.com/photo.php?fbid=10208956151678787&set=a.1135580027456.2020908.1165998916&type=3&theater

Published on : 28/10/2016

காவிரி வரலாற்றுக் காணொளிகள் வெளியீடு

காவிரி வரலாற்றுக் காணொளிகள் வெளியீடு :
பெரும் பணியின் சிறிய துவக்கம் இது!
ம.செந்தமிழன்



ஏறத்தாழ நூறு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் ஏவப்பட்டன. 90 வயது மூதாட்டியை வீட்டிற்குள் பூட்டி வைத்து, வீட்டோடு கொளுத்தினார்கள். ஒன்றரை இலட்சம் பேர் அகதிகளாக விரட்டப்பட்டனர். குடிக்க நீரின்றி, உணவின்றி, ஒதுங்க வீடின்றி காடுகளில் பதுங்கிக் கிடந்தனர் பல்லாயிரம் மக்கள். கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இவ்வளவும் தமிழர்கள் மீது கன்னட இன வெறியர்கள் நடத்திய தாக்குதல்கள். 1991 ஆம் ஆண்டு டிசம்பர், 1992 ஜனவரி ஆகிய இருமாதங்களில் இந்தக் கொடுமைகள் அரங்கேறின.

‘தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர வேண்டும்’ என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிற்குக் கன்னடர்கள் ஆற்றிய எதிர்வினைகள் மேலே உள்ளவை.

இவையெல்லாம் உங்கள் கவனத்திற்கு வந்தனவா எனத் தெரியவில்லை. இவற்றைப் பற்றி நீங்கள் தீவிரமாகச் சிந்தித்திருந்தால்கூட, இந்த 25 ஆண்டுகளில் காவிரி நதி மீதான தமிழர் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கும்.
போராட்டம் என்பது விடுதலைக்கான வழிமுறைகளில் ஒன்று. போராட்டம் மட்டுமே தீர்வு தரும் என நான் நினைக்கவில்லை. போராட்டம் எனும் வழியைத் தேர்ந்தெடுக்கும் முன், ‘நமக்குத் தீர்வு வேண்டும்’ என்ற விருப்பம் உருவாக வேண்டும். அந்த விருப்பம் தெள்ளத் தெளிவானதாகவும் அழுத்தமானதாகவும் இருந்தால், எல்லா விடுதலைகளும் சாத்தியமாகும்.
மிக நீண்ட காலமாக காவிரி நதியின் மீது அலட்சியம் காட்டியுள்ளோம். நாம் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. அவற்றிற்கெல்லாம் முன்னர், காவிரியின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். வரலாறுதான் மரபுகளைத் தாங்கியுள்ள வேர். வேரை உணராத மரங்கள் இற்றுவிழுகின்றன. நம் வேர் இன்னும் உயிர்ப்போடுள்ளது. நாம் அதை உணர்ந்தால் போதும், தேவையான ஆற்றல் நம் கிளைகளுக்கு வழங்கப்படும்.

காவிரிக்கும் நமக்குமான வரலாற்று உறவு, இக்காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் இக்காணொளியைப் பொறுமையாக உள்வாங்குங்கள். பின்னர், இக்காணொளி இணைப்புகளையும் இவற்றில் உள்ள தகவல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ’காவிரி நதி உயிர்ப்போடு மீண்டு வர வேண்டும்’ என்ற விருப்பத்தை மனதில் நிலைநிறுத்துங்கள். நாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களுக்கும் அந்த விருப்பம் வழிகாட்டும்.
காவிரி நீர் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ‘எதிர்வினையாற்றாதீர்கள், மறுவினையாற்றுங்கள்’ என்று ஏற்கெனவே எழுதினேன். அக்கட்டுரையில், ‘காவிரியின் வரலாற்றினைத் தொகுத்து வெளியிடுவோம்’ என உறுதியளித்திருந்தேன். அதன்படி, கடந்த இரு மாதங்களாக இப்பணியில் ஈடுபட்டோம்.

https://www.facebook.com/directorsenthamizhan/posts/10208613230145963

செம்மைக் குடும்பத்தினரான ஆனந்த் செல்லையா, கலாநிதி, நளினி, காந்திமதி ஆகியோரின் மிகக் கடுமையான உழைப்பு இப்பணியில் உள்ளது.
காவிரி ஓட்டப் பாதையில் உள்ள காடுகளுக்கு என்னுடன் பயணித்து, ஒளிப்படங்கள் பதிவு செய்தார் பால் க்ரிகோரி.
இக்காணொளிகளை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டி, பொறுமையாக விளக்குங்கள்.

காணொளிக் காட்சிகள் ஐந்து பகுதிகளாக உள்ளன. வரிசைப்படி காணுங்கள். தரவிறக்கம் செய்வதற்காக, youtube இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
காணொளிப் பகுதிகளின் தலைப்புகள்:

1. தமிழர் வரலாற்றில் காவிரி
2. 1991: கறை படிந்த காலம்
3. தீர்ப்புகளும் அத்துமீறல்களும்
4. காவிரிப் போராளிகள்
5. உண்மையான அன்புதான் உரிமை பெற்றுத் தரும்.
மேற்கண்ட வரிசைப்படி காணொளிகளைக் காணுங்கள்.

செம்மைவெளியீட்டகப் பக்க இணைப்பு:
https://www.facebook.com/Semmai-Publications-2439520491109…/

Published on : 01/11/2016

ஊர் திரும்புங்கள் எனக் கூறுவது, நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்ட வடிவம்தான்!

          ஊர் திரும்புங்கள் எனக் கூறுவது,                    

நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்ட வடிவம்தான்!

ம.செந்தமிழன்

 

செம்மை வாழ்வியல் வகுப்பின்போது, மக்கள் கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான எனது விளக்கங்களும்.

இப்பொழுது எல்லாம் கடைகளில் வாங்கும் காய்கறிகள், அரிசி, போன்றவற்றில் அதிகமான உரம் ரசாயனம் இருக்கிறதே அதற்கு என்ன செய்ய வேண்டும்?

- விவசாயம் என்றாலே இயற்கையாகச் செய்வது தான். இரசாயன வேளாண்மையா இயற்கை வேளாண்மையா என்பதே தவறு. இரசாயனம் சேர்த்து செய்தால் அது வேளாண்மையே இல்லை. விவசாயம் என்றாலே இரசாயனம் கலக்காமல் விளைவிப்பது தான். அப்படி விளைவது தான் நல்ல காய்கறிகள். அது கிடைக்காத நிலைமைக்கு நாம் இப்பொழுது வந்து விட்டோம். பணம் இருந்தால் கூட நல்ல காய்கறிகள் கிடைக்காத வறுமையில் உள்ளோம். 

நஞ்சு இல்லாத உணவு வேண்டும் என்பது பெரிய புரட்சி இல்லை நமது அடிப்படை உரிமை. நாம் மிக மோசமான இடத்தில் உள்ளோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நஞ்சு இல்லாத காய்கறிகள் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கூட காய்கறிகள் கிடைக்காது. கடல் மீன் கூட நஞ்சு இல்லாமல் கிடைப்பது இல்லை அணுக்கழிவுகள் முழுவதையும் கடலில் தான் கொண்டு போடுகிறார்கள்.

இந்த நிலைமைகள் மாற வேண்டும் என விரும்புங்கள். இயற்கையான சூழல் பெருக வேண்டும், இயற்கையான உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுத் தோட்டங்களில் கவனம் செலுத்துங்கள். நிலம் வைத்திருப்போர், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுங்கள். எவராவது நமக்கு உற்பத்தி செய்து தருவார், நாம் அதை சாப்பிடலாம் என்ற நினைப்பிலிருந்து வெளியேறுங்கள். நிலம் இல்லாதோர், இயற்கை விளைபொருட்களைத் தேடி வாங்குங்கள்.

நஞ்சில்லா காய்கறி வாங்க வழி உள்ளதா?
- இயன்றவரை, அவரவருக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டால் தான் இதற்கு எல்லாம் மாற்று கிடைக்கும் 

விதை பற்றாக்குறை உள்ளதா?
அது அடுத்த கட்ட பிரச்சனை , உள்ள விதைகளுக்கே இன்று விவசாயம் செய்ய ஆள் இல்லை. சாதாரண செயல் திட்டம்தான் , பசுமைப் புரட்சியோ , வெண்மைப் புரட்சியோ இல்லை . சில காலத்திற்கு முன், நூற்றுக்கு எண்பது பேர் விவசாயம் செய்தார்கள். அவர்கள் தங்களுக்கான உணவையும் மீதமுள்ள இருபது பேருக்கான உணவையும் உற்பத்தி செய்தார்கள். இதைப் பெரும் வியாபாரமாக மாற்ற நினைத்துதான் பசுமைப் புரட்சி என்ற கொடிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். எண்பது சதவீதமாக இருந்த விவசாயிகள் இப்போது ஏறத்தாழ அறுபது சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். இவர்களால், மீதமுள்ள நாற்பது சதவீதத்தினருக்கு இயற்கையான உணவைக் கொடுக்க முடியாது. இயற்கையில், அவ்வாறு விளையாது .

உணவு உற்பத்தி செய்பவர்களை /விவசாயிகளை குறைப்பதுதான் திட்டமா ?
- ஆம். அதுவே அவர்களது நோக்கம் . உணவு உற்பத்தியை பெரும் உற்பத்தியாக மாற்றவேண்டும், 5 சதவிகிதம் பேரே உணவு உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 95 சதவிகிதம் பேரும் இந்த 5 சதவிகிதம் பேரையே உணவுக்காக
நம்பி இருக்கவேண்டும் . இவ்வாறு மாற்றுவதே திட்டம். இது அழகாக நடந்தேறி வருகிறது .இதைத் தடுக்கவே நாம் ஊர்திரும்புங்கள் ஊர்திரும்புங்கள் என்று கூறுகிறோம். இது சேவை அல்ல , தேவை.

உங்களுக்கு தேவையானதாவதையாவது உற்பத்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மட்டுமாவது செய்து கொள்ளவேண்டும்.

அவ்வளவுதான் ஒருவரால் செய்ய முடியும். மறுபடியும் மறுபடியும் இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்து தருவார்கள் அவர்களிடம் நாம் இருபது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று எல்லாம் நினைத்து கொண்டு இருந்தால் அதுவெல்லாம் நடக்காது. ஊர் சந்தைக்கு காய் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள் சொல்கின்ற விலை தான் கொடுக்கின்றோம். அவர்கள் இடத்தில் போய் எடுத்துக்கொண்டு வருகின்றோம். தக்காளி விலை முப்பது ரூபாய் சொல்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் அது சரியான விலைதான். ஆனால் இருபது கிலோ தான் தருவேன் என்று சொல்கிறார்கள். ஊர் சந்தைக்கு வரும் கூட்டத்திற்கு ஒருவருக்கு ஒரு தக்காளி என்றால் கூட பற்றாக்குறையாக தான் இருக்கும். 

நாம் நடத்தும் ஒரு சின்ன சந்தைகே இவ்வளவு பற்றாக்குறை. நமக்கு நிறைய தொடர்புகள் உள்ளன. கேட்டவுடன் வாங்கிக் கொடுப்பதற்கு நண்பர்கள் இருக்கின்றார்கள். பணம் இருக்கின்றது, வாங்குவதற்கு மக்கள் இருக்கின்றார்கள். அனைத்தும் இருந்தும் வாங்குவதற்கு காய்கறிகள் கிடைக்கவில்லை. ஊர் சந்தைக்கு வரும் அறநூறு எழுநூறு குடும்பங்களுக்கே காய் வாங்குவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது ஏழு கோடி மக்களுக்கு என்ன செய்வது?

சென்னையிலேயே வாய்ப்பு இருக்கின்றவர்கள் சொல்லுங்கள் மாடியிலேயே தோட்டம் போடுவோம். முதலில் வெளி ஊரிலிருந்து காய்கறிகள் வரக்கூடாது என்ற முடிவை எடுத்து கொள்ளவேண்டும். 

வாய்ப்புள்ளோர் ஊர் திரும்புங்கள். வாய்ப்பில்லாதோர் வீட்டுத் தோட்டங்கள் அமையுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால், ஏழை எளியோருக்கும் இயற்கை உணவுகள் கிடைக்கும். இல்லையெனில், இயற்கை உணவு என்பது பணக்காரர்களுக்கான சந்தையாக மட்டுமே இருக்கும். அவ்வாறான நிலைமை நாம் வாழும் காலத்தில் உருவானால், அது நாம் செய்யும் பெரும் பாவம் என நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் எல்லாவற்றையும் சம்மாகப் படைத்த இறைக்கு மன்சாட்சிப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனக்குள் இந்த அச்சமும் அக்கறையும் உள்ளது.

ஓரளவு செல்வம் உள்ளோர் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால், நம்மைச் சுற்றியுள்ள எளியோருக்கு நல்ல உணவு கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.

நாங்கள் 2012இல் உணவு திருவிழா ஓசூரில் நடத்தினோம். அது தான் தனியார் அமைப்பு நடத்திய முதல் பெரிய உணவுத் திருவிழா. அப்பொழுது விகடனில் அதை பற்றிய ஒரு பேட்டி வந்து இருந்தது. அப்பொழுது பூங்கார் இருபது ரூபாய், காட்டுயானம் வாங்குவதற்கு யாரும் இல்லை. அனால் இன்று பூங்கார் எழுபத்து ஐந்து ரூபாய். இதை எத்தனை மக்களால் வாங்க முடியும்? வாங்க முடியாது. எழுபத்து ஐந்து ரூபாய்க்கு விற்றாலும், இயற்கை விவசாயிக்குக் கட்டுப்படி ஆகுமா? அவர்களுக்கும் ஆகாது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட இயற்கை விவசாயிக்கு ஆதாயம் இல்லை. இதுதான் பொருளாதாரம்.

இவ்வளவு மோசமான நிலைமை உணவிற்கு. அரிசி நஞ்சு இல்லாமலும் இருக்க வேண்டும் அதிகமான விலையும் இருக்கக் கூடாது. இரண்டையும் சமப்படுத்த வேண்டும். 

ஜூலை மாத ஊர் சந்தையில் பொது உரிமை அங்காடி என்று ஒன்று அறிமுகம் செய்தோம். ஒரு கிலோ அரிசி அறுபத்தி ஐந்து ரூபாய் அடக்க விலை அப்போது இருந்தது. நான்குஇ ரூபாய் கூடுதலாக வைத்து, ஒரு கிலோ 72 ரூபாய்க்கு விற்றால், யாரால் அரிசி வாங்கி செல்ல முடியும்?
வாங்குபவர்களுக்கும் லாபம் இல்லை விற்பவர்களுக்கும் லாபம் இல்லை. இதை முதலில் மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு லாரி வாடகைக்கு எடுத்து ஐநூறு கிலோ அரிசி கொள்முதல் செய்து அதை ஐம்பத்தெட்டு ரூபாய் என்று விற்றோம். ஆனால் அதற்கு அடக்க விலை ஐம்பத்தைந்து ரூபாய் வந்தது. இப்படி வேலை செய்தே ஐம்பத்தி எட்டு ரூபாய்க்குத்தான் இயற்கை அரிசி கிடைக்கின்றது . சிப்பம் சிப்பமாக மக்கள் வாங்கி கொண்டு சென்றார்கள். ஒரு கிலோ வாங்கியவர்கள் இருபத்தி ஐந்து கிலோ வாங்கினார்கள். 

இதில் இரண்டு ரூபாய் தான் ஊர் சந்தைக்கு லாபம். செம்மைச் சமூக மக்களின் உழைப்பைக் கணக்கிட்டால், அதுவும் இருக்காது. இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. முடிந்தவர்கள் உற்பத்தியில் ஈடுப்பட வேண்டும். பகுதி நேரமாவது ஈடுப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் முதலில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும். அதிகமாக கூட இல்லை முதலில் ஒரு ஏக்கர் வாங்கினாலே போதும். அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊர் திரும்புதல் பற்றி பேசும்போதோ அல்லது வேளாண்மை பற்றி பேசும்போதோ நிறைய கேலிகளுக்கு உள்ளாகின்றோம். என்னையும் தனி பட்ட முறையில் நிறைய பேர் கேலிசெய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஊர் திரும்புங்கள் என நான் கூறுவது, இக்காலத்திற்கான சமூகப் போராட்டத்தின் வடிவம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமது நிலங்களை வைத்து அவர்கள் சூதாட்டம் நட்த்தும்போது, நாம் நம் நிலங்களுக்குத் திரும்புவதுதானே சரியான போராட்டமாக இருக்க முடியும்!
போராட்டம் என்பது வாழ்வியல் நடைமுறைகளில் இருக்க வேண்டும் என்ற கொள்கையைத்தான் நான் நம்புகிறேன். அதைத்தான் மக்களிடம் பரப்புகிறேன். அதைத்தான் நானும் செம்மைக் குடும்பத்தினரும் செயல்வடிவமாக மாற்றிக்கொண்டுள்ளோம்.

நாங்கள் வெறும் பிரசாரம் செய்வோர் இல்லை, செயல் வடிவம் கொடுக்கிறோம்.

‘எங்கள் தாகத்திற்குத் தண்ணீர் இல்லை, நல்ல உணவு இல்லை, காற்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கிழித்தீர்கள்?’ என என் சந்ததி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நிலைமை உருவாகக் கூடாது என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தின் கட்டளைக்கேற்ற செயல் வடிவங்களில் ஒன்றுதான் ‘ஊர் திரும்புங்கள்’ என்பது.

Published on : 04/11/2016

டெல்லி மூச்சுத் திணறல் குறித்து

காற்று மாசுபட்டால், உயிர் சிதைவதாகப் பொருள்!

-டெல்லி மூச்சுத் திணறல் குறித்து…
ம.செந்தமிழன்

வயல்களில் கொளுத்தப்படும் கூளங்கள்தான் எவ்வளவு ஆபத்தானவையாக இருக்கின்றன! டெல்லி மாநகரையும் அதன் சுற்றுவட்டாரங்களையும் மூச்சு முட்ட வைக்கின்றனவே அக் கூளங்கள். அமைச்சர்கள் அலறுகிறார்கள், முதல்வர் உதவி கேட்கிறார், ஊடகங்கள் கதறுகின்றன, மக்களோ மூச்சு விடுவதற்கே சிரமப்படுகிறார்கள். காற்றைத் துல்லியமாக வடிகட்ட முடியாது. ஆனாலும், காற்று வடிகட்டி முகமூடிகள் விற்பனை உச்சகட்டத்தை எட்டிவிட்டது. டெல்லியின் காற்று மாசுபாடு இப்போது சர்வதேசச் செய்திகளில் இடம் பிடித்துவிட்டது.

இவ்வளவுக்கும் காரணம், வயல்களில் கொளுத்தப்படும் வைக்கோல்களும் பிற தாவரச் சக்கைகளும்தான்!

டெல்லியைச் சுற்றிலும் கரும்புகையை, வெண்புகையைக் கக்கிக்கொண்டுள்ள மாபெரும் தொழிற்சாலைகள் இந்நிலையை உருவாக்கவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் ஐந்து கிலோ மீட்டர் மட்டும் ஓடும் கார்களும், இருபத்தைந்து கிலோ மீட்டர்கள் ஓடும் இருசக்கர வாகனங்களும் இந்நிலைக்குக் காரணமல்ல. வீட்டுக்கு வீடு குளிர்சாதனப் பெட்டி வைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினரும், அறைக்கு ஒரு பெட்டி வைத்துள்ள மேட்டுக்குடிகளும், மாளிகை போன்ற வீட்டின் கழிவறையைக்கூட குளிரூட்டி சுகம் காணும் பெருந்தனக்காரர்களும் இந்நிலையை உருவாக்கவில்லை. கிலோ மீட்டர் கணக்கில் ஆழ்துளை இட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியே துப்பும் எந்தத் தொழிற்சாலையும், நீரை விற்றுப் பணமாக்கும் எந்த நிறுவனமும், ஆற்றில் கழிவு கொட்டும் எந்த ஆலையும் இந்த நிலைக்குக் காரணமல்ல. வயல்வெளிப் புகைமூட்டம்தான் காரணம்.

இந்தச் சமூகம் அழியப் பிறந்தது என்றால் இந்தக் கதைகளை நம்பிக்கொண்டிருக்கும். வாழப் பிறந்தது என்றால், இந்நேரம் எண்ணற்ற கேள்விகளை எழுப்பி இருக்கும். நான் கவனித்தவரை, அவ்வாறான கேள்விகளை எழுப்புவோர் மிகக் குறைவாக இருக்கிறார்கள். பெரும்பான்மையருக்கு டெல்லி மூச்சுத் திணறல் என்பது ஒரு செய்தியாகவும், வயல்களால் உருவான சிக்கலாகவும்தான் தெரிகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர், ‘காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. மக்கள் முகமூடியுடன் அலையும் காலம் நெருங்கிவிட்டது’ என்று வேதனைப்பட்டார். தொழிற்சாலைகளின் பெருக்கத்தையும் வன அழிப்பையும் கட்டுப்படுத்த வேண்டும் என அவரும் பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பும் கடந்த சில மாதங்களாக, கடுமையான கருத்துகளைக் கூறி வருகின்றன. மிகையான வயல் வெளிப் புகையால் மாசு உருவாகும் என்பது உண்மை என்றால், மிகையான தொழிற்சாலைகளால் அதைக் காட்டிலும் அதிகமான மாசு உருவாகும்.

டெல்லியில் காற்றுத் தாக்குதல் நடக்கும் இதே நேரம், தமிழகத்திலும் காற்று தன் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் உள்ளது. வடமேற்குப் பருவமழையைக் காற்றுதான் அழைத்து வர வேண்டும். தமிழகத்திற்குள் அக்காற்று தன் மேகக் கூட்டத்துடன் இதுவரை நுழையவில்லை. இப்போது நாம் ஐப்பசி மாதத்தின் இறுதிப் பகுதியில் இருக்கிறோம். இந்நேரம் அடைமழை பொழிந்துகொண்டிருக்க வேண்டும். ஆங்காங்கே தூறல்களும் சிறிதளவு மழையுமாக ஐப்பசி கழிகிறது. தென்மேற்குப் பருவமழையும் பல இடங்களில் பொழியவில்லை.

காங்கேயம் உள்ளிட்ட பல ஊர்களில் கடந்த மாதம், வறட்சி காரணமாக ஒரு விபரீதச் செயல் நிகழ்ந்தது. புல் கூட முளைக்காத அளவுக்கு நிலம் வறண்டதால், மாடுகளுக்குத் தீவனம் இல்லை. மாடு வளர்ப்போர் பலர், பஞ்சு மூட்டைகளை வாங்கி, அவற்றை நீரில் ஊறவைத்து மாடுகளுக்கு ஊட்டினார்கள். பருத்திக்கொட்டையை ஆட்டுக் கல்லில் இட்டு, மாவு போல் அரைத்து, மாடுகளுக்கு ஊட்டி விட்ட சமூகம் இது. இப்போது, நீரில் ஊறிய பஞ்சை தீனியாக்கொண்டுள்ளது.

எப்போதும் குளுமையாக இருந்த பொள்ளாச்சியில் இப்போது வறண்ட காற்று வீசுகிறது. திடீரென, வத்தலகுண்டில் வெள்ளம் பாய்கிறது. காவிரி நீர்ப் பிடிப்புக் காடுகளில் இந்நேரம் கடும் மழை பொழிய வேண்டும். சிறு ஓடைபோல அந்தப் பேராறு ஓடுகிறது. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் குளங்களும் ஏரிகளும் வெடித்துக் கிடக்கின்றன.

தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கோடையில் துவங்கிய வறட்சி இன்னும் நீடிக்கிறது. நாமக்கல், கோவை, ஈரோடு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மோசமான ஆழத்திற்குச் சென்றுவிட்டது. பதினைந்து குதிரைத்திறன் (15hp) எந்திரங்களை வைத்து நீர் இறைக்கும் நிலை பல இடங்களில் உள்ளது. பொதுவாக, மூன்று, ஐந்து குதிரைத் திறன் எந்திரங்களோ போதுமானவை. நீர்மட்டம் குறைந்தால், எந்திரங்களின் திறனை உயர்த்த வேண்டும் என்ற அறிவு இச்சமூகத்தினருக்கு உள்ளது. நீர் மட்டம் குறைந்தால், பூமியைச் சீரழிப்பதை நிறுத்த வேண்டும் என்ற மனசாட்சி இல்லாமல் போய்விட்டது.
’தமிழகம் தொழிற்துறையில் பின் தங்கிவிட்டது’ என்று இப்போது ஊடகங்கள் கவலை தெரிவிக்கின்றன. ‘தமிழகத்தில் எந்தப் பன்னாட்டு நிறுவனமும் தொழில் துவங்க வருவதில்லை’ என பல மேதைகள் கருத்து தெரிவிக்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வேண்டும், இன்னும் பல ஸ்மார்ட் நகரங்கள் தமிழகத்திற்கு வேண்டும் என்றெல்லாம் குரல்கள் எழுகின்றன. ’இந்தக் கூட்டத்துடன் நம் பிள்ளைகள் எப்படி வாழப் போகிறார்கள்?’ என்ற கவலை அடிக்கடி எழுகிறது.

குடிக்கத் தண்ணீரில்லாத மக்கள், பணம் கொடுத்து வேதி நீரை வாங்கும் மக்கள், நோய்களை உடலெங்கும் சுமந்து திரியும் மக்கள் இவ்வளவு பேர் இருக்கும் இந்த நாட்டில் இன்னும் பல தொழிற்சாலைகளை வரவேற்பது தற்கொலைக்குச் சமமானது. கடலூர், புதுச்சேரி ஆகிய இரு நகரங்களைச் சுற்றிலும் உள்ள நுரையீரல் நோயாளிகளைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் குலை நடுக்கம் வரும். வடசென்னையும் அதன் புறநகரங்களும் தொழிற்சாலைகளால் சந்திக்கும் சீர்கேடுகளைக் கண்டால் படித்த சமூகத்தின் மீது அருவருப்புதான் உருவாகிறது.
வெட்டப்படும் மலைகளைத் தடுப்பதற்கும், அழிக்கப்படும் காடுகளைக் காப்பதற்கும், கொள்ளையிடப்படும் ஆறுகளை அரவணைப்பதற்கும் திராணியற்ற கூட்டம், அயல்நாட்டு முதலீடுகள் இன்னும் வரவில்லை என ஒப்பாரி வைக்கிறது. இவ்வாறெல்லாம் தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதுதான் ’முற்போக்கு’. எந்தத் தொழிற்சாலையும் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக நமது இயற்கைவழி வாழ்வியலுக்குத் திரும்புவோம் எனக் கூறினால், அது பிற்போக்கு.

அயல்நாட்டு முதலீடுகள் வந்து குவியட்டும். முற்போக்குவாதிகள் அவற்றில் பணி செய்யட்டும். அவர்கள் வங்கிக் கணக்குகளில் பணம் பெருகட்டும், இல்லங்களில் பொருட்கள் குவியட்டும், உணவு, நீர், காற்று யாவும் மாசடையட்டும், மருத்துவத் தொழிற்சாலைகள் மேலும் செழிக்கட்டும், பணம் பணம் பணம் என பணம் சிறகு முளைத்துப் பறக்கட்டும். பறக்கும் பணப் பறவைகளைப் பிடிக்க, முற்போக்குவாதிகள் வலைவிரிக்கட்டும். புதிது புதிதாக கருவிகள் அறிமுகமாகட்டும், வாகனங்கள் பெருகட்டும், புகை மூட்டம் விண்ணை முட்டடும், நீரும் நிலமும் கதறி அழட்டும். அக்கதறல் காதில் விழாதவகையில், கேளிக்கைக் கூடங்களில் கூத்து நடக்கட்டும்.
மனிதர்களின் பேராசைகள் வெற்றி பெற்றால், முதல் அழிவு மனிதர்களுக்குத்தான் ஏற்படும். முற்போக்குவாதிகளின் பேராசைகள் வெல்லும் முன், முட்டாள்களின் பிற்போக்குத்தனங்கள் அதிகரிக்க வேண்டும். எனக்குத் தொழிற்சாலை வேண்டாம், நவீன சாதனங்கள் வேண்டாம். நல்ல நீரும் காற்றும் வேண்டும். உண்பதற்கு நல்ல உணவு வேண்டும். வாழ்வதற்கு இயற்கையான சூழல் வேண்டும் என்ற விருப்பங்களில் நிலை பெறுங்கள்.
டெல்லிக்கு அடுத்த நிலையில் காற்று மாசு உருவாகியுள்ள நகரம், பெங்களூர். அதற்கு அடுத்த இடம் சென்னைக்கு உள்ளது.

நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். இது ஊழிக் காலம். இன்றைய தேதியில் புவியெங்கும் நிகழ்ந்துகொண்டுள்ள மாற்றங்களைச் சற்றே கவனித்துப் பாருங்கள். இப்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெருநிறுவனத்தினரும் அவற்றின் அடிமைகளும் நம்மிடம் பொய் பேசிக்கொண்டுள்ளனர். நிகழும் சூழல் மாற்றங்களைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்வதில்லை.

ஊழியைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், ஊழியில் தப்புவதற்கு நமக்கு வழிகள் உள்ளன. மனதளவில் உங்களிடம் மாற்றம் வர வேண்டும். இந்தப் பூமி நமக்காகவும் பிர உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. நாம் அனைத்து உயிரினங்களுடனும் நல்லிணக்கமாக வாழ வேண்டும். பூமியைச் சிதைக்கும் எந்தத் தொழில்நுட்பத்தையும் நிராகரிக்க வேண்டும். உடனடியாக மரபுக்குத் திரும்புவது, இயலாததுதான். ஆனால், திரும்ப வேண்டும் என்ற சிந்தனையை விருப்பமாகக் கொள்ள வேண்டும். அந்த விருப்பத்தில் மாறாமல், நிலைபெற வேண்டும். பிசாசுகளின் நவீன அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், உள்ளத்தில் தெளிவுகொண்டு இயற்கையின் பாதையில் நடக்க வேண்டும்.

நேற்று சென்னையைத் தாக்கிய வெள்ளத்தை உலகம் வேடிக்கை பார்தது. இன்று டெல்லியின் மூச்சுத் திணறலை வேடிக்கை பார்க்கிறது. அன்றாடம் ஏதேனும் ஒரு நகரம் தாக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதுதானே இப்போதைய நாகரிகம்! புகுசிமா எனும் ஊரில் அணு உலை வெடித்து, பல்லாயிரம் மக்கள் அழிந்ததை வேடிக்கை பார்த்த பின்னரும், கூடங்குளத்தில் அணு உலை அமைக்க ஆதரவு கொடுக்கும் சமூகம்தானே இது! இது எல்லாவற்றையும் வேடிக்கையாகத்தான் பார்க்கும்.

நீங்களும் வேடிக்கை பார்க்காதீர்கள். இந்தச் செய்திகள், சம்பவங்கள் உணர்த்தும் கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். வீடுகளில் உள்ள நவீன சாதனங்களை படிப்படியாகக் குறையுங்கள். வாகனப் பயன்பாட்டை, எரிபொருள் பயன்பாட்டை குறையுங்கள். குறைந்தளவு பணம் இருந்தாலும் நன்றாக வாழும்படியான வாழ்க்கைக்குத் திரும்புங்கள். ஏதேனும் வெளிநாட்டுக்கு அனுப்பலாம் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்தால் வேலையில் அமர்த்தலாம் என்ற சிந்தனையுடன் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். இந்த நிலத்திலேயே நமக்கான எல்லா வளங்களும் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையைச் சுரண்டாத எண்ணற்ற தொழிலகங்களை நம்மால் உருவாக்கி நீடு வாழ முடியும்.
திருவாசகத்தில் ஆசான் மாணிக்கவாசகர் இறைவனது வடிவங்களைப் பின்வருமாறு குறிக்கிறார்,
‘நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு….’
- நீயே நிலமாகினாய், நீராகினாய், நெருப்பாகினாய், வான் வெளியாகினாய் என்று கூறுகையில், காற்றாகினாய் என்று குறிப்பிடாமல், ‘உயிராகினாய்’ என்கிறார். காற்றும் உயிரும் ஒன்று என்பது இதன் பொருள்.
எப்போது காற்று மாசுபட்டு, சுவாசிக்க இயலாத நிலை வந்துவிட்டதோ அப்போதே, உயிர்களின் சிதைவும் அழிவும் துவங்கிவிட்டது என்று பொருள்.

மரபுக்குத் திரும்புங்கள்!

 

Published on : 08/11/2016

இட பாகம் – நூலிலிருந்து சில பத்திகள்

இட பாகம் – நூலிலிருந்து சில பத்திகள்
-ம.செந்தமிழன்

எந்த உயிரில் ஆண் தன்மை மிகுந்துள்ளதோ அது ஆண் என்றும், பெண் தன்மை மிகுந்த உயிர் பெண் என்றும் அறியப்படுகிறது. ஆனால், இரு தன்மைகளும் கலந்த நிலைதான் எல்லா உயிர்களுக்கும் உள்ளது என்பதை அழுத்திக் கூற விரும்புகிறேன்.

நமது மரபு மெய்யியலில் இதை, சிவம் – சக்தி என்றழைக்கிறோம். சிவம் - ஆண்மையையும், சக்தி – பெண்மையையும் குறிக்கிறது. ஆனால், சிவமும் சக்தியும் தனித்தனியாக இருப்பதே இல்லை.

இறையின் இட பாகம் பெண்மை, வலப் பக்கம் ஆண்மை என்பது கருவுரு மெய்யியலின் சாரம். ’எனக்கு வலப்பக்கத்தில் இருப்பவரே…உமக்கு ஸ்தோத்திரம்’ என்பது விவிலியத்தின் வாசகங்களில் ஒன்று. கர்த்தராகிய தந்தையை நோக்கி இவ்வாசகம் கூறப்படுகிறது. 

வலப்பக்கம் இருப்பவர் தந்தை என்பதை ஆதி கிறித்தவம் கூறியது. தமிழர் மரபில், இடது, வலது பக்கங்களை முறையே பெண், ஆண் என்று பதிவு செய்துள்ளனர்.

ஆண்மை, பெண்மை ஆகிய இரண்டும் கலந்த நிலைதான் அனைத்து உயிர் வடிவங்களும் ஆகும். ஓர் உயிரில் எந்தத் தன்மை மிகுந்துள்ளதோ அந்தப் பாலினமாக அவ்வுயிர் உணர்கிறது, அறியப்படுகிறது. 


ஆண் வேறு பெண் வேறு என்பதெல்லாம் அறிவுசார்ந்த அடையாளங்கள்தான்.
ஆண்கள் என்றால் போர்த் தொழிலுக்குப் போகின்றவர்கள், பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்பவர்கள் என்ற புரிதல் சமீப காலத்தில் உருவானது. வரலாற்றில் இப்படியான நிலைமை இருந்ததில்லை.

நம்முடைய கோயில்களின் சிற்பங்களில் உடைவாளைச் செருகிக் கொண்டு நிற்கும் பெண்களைப் பார்க்கலாம். தெய்வங்களில் கொற்றவை, காளி ஆகிய வடிவங்கள் ஈவிரக்கமின்றி தீமைகளை அழிக்கும் இயல்பு கொண்டவைதான். பொதுவாகவே பெண் தெய்வங்கள் அனைவரும் வீரம் செறிந்தவர்கள்தான் என்பதை அவர்களின் உருவங்களைக் கண்டாலே புரிந்து கொள்ளலாம்.
எனவே, பெண்தன்மை என்பது ’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு மூட நம்பிக்கைகளை உடையது’ என்ற கருத்தை முதலில் ஆண்கள் தூக்கிப்போட்டு உடைக்க வேண்டும்.
…………..

பெண்கள் ஏன் கருப்பையை நீக்கும் அளவிற்கு மருத்துவமுறைகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள் என்பதுதான் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய, கூடுதலாகப் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
மாதவிலக்கு நாட்களில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏன் என்றால் உதிரப்போக்கு என்பது மலம் கழிப்பது போன்ற நிகழ்வு இல்லை. உதிரப்போக்கை ’கழிவு’ என்று சொல்லக்கூடிய கொள்கையும் இப்போது இருக்கின்றது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. உதிரப்போக்கு என்பது நிச்சயமாகக் கழிவு கிடையாது.
உதிரத்தின் வழியாக வெளியேறுபவை யாவும் உயிரணுக்கள். உணவில் கிடைக்கும் ஆற்றலை உயிரணுக்களாக மாற்றும் பணி கருப்பை மண்டலத்தில் நிகழும். உயிரணுக்கள் உருவாக வேண்டுமானால் ஒட்டுமொத்த உடலின் பருவநிலையும், ஆற்றல் மண்டலங்களும் சீராக இருக்க வேண்டும். 

மாதவிலக்கு நாட்களில் வெளியாகும் உதிரத்தில் கணக்கிட இயலாத உயிரணுக்கள் உள்ளன. அவை எல்லாம், மனித உயிரணுக்கள் என்று தெளிவாகக் கூற இயலாத நிலையில் உள்ளவை.

சாப்பிட்ட பிறகு சிலமணி நேரத்தில் அது மலமாகி வெளியேறி விட்டது என்பது போன்ற செரிமான வேலையை அது செய்யவில்லை. உயிர் ஆற்றலை, உயிர் அணுக்களை, சுரப்பிகளைத் தூண்டி, சீர் செய்துவிட்டு, தன்னுடைய சுத்திகரிப்பு பணியை முடித்துவிட்டு, தேவைக்கு அதிகமான உயிர் ஆற்றலையும் தக்க வைத்துக் கொள்வதுதான் கருப்பை. நிச்சயமாக அது ஆசனவாய் கிடையாது. சிறுநீரகம் கிடையாது. 

கருப்பை என்பது உயிர்களைத் தாங்கி வளர்க்கும் உறுப்பு. இதைத் தயவுசெய்து மனதில் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது கழிவு அல்ல. கழிவு என்று புரிந்து கொண்டதன் விளைவாகத்தான், ஏதோ மலம் கழிப்பதைப் போல அதைப் பற்றிய அணுகுமுறை இந்தச் சமூகத்தில் உருவாக்கப்பட்டு, அதற்கெல்லாம் எதற்கு ஓய்வு என்ற திமிர் பிடித்த மனோநிலை இப்போது உருவாக்கப்பட்டு உள்ளது. 

அதனால்தான் மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

இவ்வாறு ஓய்வு எடுக்கும் முறையில், குறுக்கே உலக்கையைப் போட்டு வைப்பது, யாரும் தொடக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிப்பது ஆகியவை போன்ற மூட நம்பிக்கைகள் பிற்காலத்தில் பெருகிவிட்டன. இவை எல்லாம் பெண்களுக்கு எதிரான சிந்தனையும்கூட, தொட்டால் தீட்டு, கோவிலுக்குப் போகக்கூடாது என்பவையெல்லாம் ஒழித்துக் கட்டப்படவேண்டிய பழக்கவழக்கங்கள். ஆனால் இந்தப் பழக்கவழக்கங்களை வைத்துக்கொண்டு நமது மரபு அறிவியலை நிராகரிக்க முடியாது. 


மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு எடுக்கும் பழக்கத்தை நிறுத்திய பிறகுதான் கருப்பை மருத்துவமனைகள் பெருகத் தொடங்கின.

கருப்பைக்கென்று மருத்துவ நிபுணர்கள் எப்பொழுது உருவானார்கள்? நாப்கின் அறிமுகத்திற்குப் பின்புதான். கருப்பைக்கென்று ஸ்கேன் எந்திரங்கள் இங்கே வந்தன. நாப்கின்களுடைய வருகைக்கு முன்பு அதெல்லாம் இங்கு கிடையாது.

உதிரப்போக்கு நாளில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, அன்புள்ளம் கொண்ட ஒருவரால் கூற முடியும். தொழில் நிறுவங்களை நடத்தும் முதலாளிகள் அப்படிச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு பெண்கள் பணிக்கு வர வேண்டும்; தொழிற்சாலைக்கு வர வேண்டும்; எடுபிடி வேலைக்கு வர வேண்டும்; அலுவலகத்திற்கு வரவேண்டும். அவர்கள் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுப்பு எடுப்பதை ஒரு முதலாளியால் சகித்துக் கொள்ள முடியாது. 

நான் முன்வைக்கும் கருத்து, முதலாளிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல; மனிதர்களுடைய பக்குவமற்ற அன்பற்ற சிந்தனைகளுக்கு எதிரானது. எவராக இருந்தாலும், ’உங்களுக்குச் சோர்வாக உள்ளதா? ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறேன். இது தத்துவமல்ல மிக எளிமையான சொல்தான். இதைச் சொல்வதற்குக் கூட மனமில்லாத சமூகத்தில் பிறந்த பெண்கள் இன்று கருப்பை நோயால் அவதிப்படுகிறார்கள்.
…………..

நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளில் படுக்கை அறைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. பல வீடுகளில் கணவன் மனைவி படுப்பதற்கெனத் தனி அறையே இல்லை. அக்காலத்தில், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. ஆணும் பெண்ணும் நீண்ட காலம் நலமாகவும் வாழ்ந்தனர்.
இப்போது வீடுகளின் முதல் தகவல் அறிக்கையிலேயே, எத்தனைப் படுக்கை அறைகள் என்ற விவரம் உள்ளது. அந்தப் படுக்கையறைகளில் என்ன விதமான கற்கள் பதிக்கப்பட வேண்டும், என்ன வண்ணம் பூசப்பட வேண்டும், எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்பவை போன்ற கவனங்களும் உள்ளன. ஆனால், குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் இப்போதுதான் பெருகியுள்ளன. இந்தப் படுக்கையறைகளில் என்னதான் நடக்கிறது?
……………..

‘உன்னால் எனக்கு என்ன பயன். வேலைக்குச் சென்றால் என்ன பயன், வேலைக்குச் செல்லாவிட்டால் என்ன பயன்?’ என்று யாராவது கேட்டால் அவர் மனிதன் என்ற பிறவிக்குத் தகுதி அற்றவர். ஒன்று அவர் திருந்த வேண்டும் அல்லது அவரை நீங்கள் விலக்க வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி .
எந்த உறவாக இருந்தாலும் ’ஆணும் பெண்ணும் இணைந்து இருக்க வேண்டும்’ என்பதை நோக்கியவையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அவ்வாறு இன்புறும் வகையில்தான் படைக்கப்பட்டுள்ளோம். என்னுடைய ஒருபாதி பெண் மறுபாதி ஆண். நாம் பிரிந்து இருப்பதற்கு வாய்ப்பில்லை, தேவையுமில்லை.

பணிநிமித்தமாக, பொருளாதார நிமித்தமாக வெளிநாடுகளில் வாழக்கூடிய உங்கள் கணவர்களை நீங்கள் அழைக்க வேண்டும். ’எங்களுடன் வந்து வாழவேண்டும்’ என்று நீங்கள் முதலில் விரும்ப வேண்டும். பொருளாதாரத்திற்காகப் பிரிந்திருப்பது இருவருக்குமான தண்டனை. பொருளாதாரத்தின் பொருட்டு தயவு செய்து பிரிந்து இருக்காதீர்கள்.
’பொருள்வயின் பிரிதல்’ என்று ஒரு தலைப்பு தொல்காப்பியத்திலே உள்ளது. குறிஞ்சி நிலத்திலிருந்து பொருளுக்காகச் சென்றவன் திரும்பி வருவதற்குள்ளாக அந்தப் பெண்கள் அனுபவித்த துன்பங்களை எல்லாம், பாலைத் திணைப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. அகத்திணையில் ’பாலை’ என்பது தலைவன் – தலைவி பிரிவைப் பற்றியது. 

பிரிந்து சென்ற கணவர்களைப் பற்றி அந்தப் பெண்கள் முன்வைத்த கருத்துகள் பாலைத் திணைப் பாடல்களில் உள்ளன. சற்று ஆழ்ந்து படித்தால் அவை எல்லாம் பொருளாதாரக் கோட்பாடுகள் என்பது புரியும். 

பொருள் என்றால் என்ன? பொருளாதாரம் எதற்காக வேண்டும்? ஒரு சமூகத்தின் பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சங்ககாலப் பெண்கள் பாடி வைத்தார்கள். அதிலே அந்தப் பெண்கள் வழக்கமாக சொல்லக்கூடிய வாசகம் என்னால் மறக்க முடியாத வாசகம். அவர்களில் ஒருத்தி கேட்கிறாள், ‘பொருள்தான் பெரிது என்று என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் தலைவா, என்னுடைய உடலை விடப் பெரிய பொருளை நீ எங்கே கண்டுபிடிப்பாய்?’ என்று.
ஒரு மாத காலம் இரண்டு மாத காலம் கணவனைப் பிரிந்திருந்த பெண்கள் கேள்வி கேட்டார்கள், கண்டித்தார்கள். ‘பொருள் பெரிது அல்ல. வந்து என்னுடன் குடும்பம் நடத்து. கட்டிப்பிடித்துக் கொண்டு என்னுடன் தூங்கு’ என்று நேரடியாகச் சொன்ன பாடலை இப்பொழுதும் நீங்கள் படிக்கலாம். சங்க இலக்கியத்தில் அவை உள்ளன.
…..

கல்லீரல் இல்லாமல் நுரையீரல் இயங்க முடியாது. அதுபோல ஆண்கள் இல்லாமல் பெண்கள் இயங்க முடியாது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இயங்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் எதிரிகளோ, போட்டியிடும் பாலினங்களோ இல்லை. ஒன்றாகவே இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள். ’ஒன்றாகவே இருங்கள், இன்பமாகவே இருங்கள்’ என்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள்.
…………..
இட பாகம் (மகளிர் நலம்)
- நூல் விலை ரூ.50/-

செம்மை வெளியீட்டகம் தொடர்புகளுக்கு:
விஜயன் கதிர்வேல்: 73588 87896
விற்பனைப் பொறுப்பாளர்.

வனம் மாத இதழ், ‘ஆவணி- புரட்டாசி இரட்டை இதழாக வெளியாகிறது. ஊர் சந்தையில் கிடைக்கும். சந்தாதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.
அட்டைகள் வடிவமைப்பாளர்: கலாநிதி பவேஸ்வரன்

 

Published on : 10/11/2016

கருப்புப் பண ’ஒழிப்புப் போர்’ குறித்து

பணம் என்பது வெற்றுக் காகிதம்தான்!
-கருப்புப் பண ’ஒழிப்புப் போர்’ குறித்து…

ம.செந்தமிழன்

முற்காலத்தில் இருந்த வெள்ளி, பொன், செப்பு நாணயங்கள் அவற்றுக்கான மதிப்பைத் தாங்கியிருந்தன. அதாவது, ஒரு பொற்காசு என்றால், அக்காசில் தங்கத்தின் எடை அதன் மதிப்பிற்கேற்ப இருந்தது. ஒரு மூட்டை நெல் வாங்க வேண்டுமானால், அரை பொற்காசு விலை கொடுக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அந்த அரை பொற்காசில் இருக்கும் தங்கத்தை விலைக்கு விற்று, வெள்ளி அல்லது செப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்வதானால், அக்காலத்தில் இருந்த நாணயங்கள் வெற்றுக் காகிதங்கள் அல்ல. மாறாக, நாணயங்களே மதிப்புமிக்க செல்வங்களாக இருந்தன.

‘இன்று முதல் பொற்காசுகள் செல்லுபடியாகாது’ என்று அறிவிக்கும் அகந்தையும் தேவையும் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு அறிவித்தாலும், அப் பொற்காசுகளை உருக்கித் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆக, செல்வம் மக்களிடத்திலும் இருந்தது, அரசு அதிகாரத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே, பணத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது என்ற வழக்கத்தில் நானும் என் குடும்பத்தினரும் வாழ்ந்துவருகிறோம். தேவைகள் அனைத்தும் பரம்பொருளால் நிறைவேற்றப்படும் என்பதை நம்பிக்கையாக அல்ல, உணர்வாகக்கொண்டிருக்கிறோம். செம்மைவனத்தை முன்னிறுத்திப் பல பணிகள் செய்கிறோம். வருவாயை அவ்வப்போது செலவிடுகிறோம். இந்த வாழ்க்கையில் நாங்கள் அடையும் இன்பங்கள் அதிகம். ஒருசில அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த அவமானங்கள் வழியாகத்தான் இந்தச் சமூகத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கருப்புப் பணம் குவிவதைப் பற்றியோ, அதற்கு எதிராக மக்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றியோ தனிப்பட்ட முறையில் நான் கவலைப்பட ஏதுமில்லை. எனக்கென விதிக்கப்பட்டுள்ள சமூகக் கடமைகளில் ஒன்றாக, சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்பதிவு அதற்கானதுதான்.

இப்போதுள்ள பணம் எனும் கருவி, ஒரு வெற்றுக் காகிதம். இக்காகிதத்தின் முழுக் கட்டுப்பாடும் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது. அரசாங்கமோ பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அக்காலம் போல, இந்த நாணயங்களுக்கென சுய மதிப்பு இல்லை. நீங்கள் அதிகம் படித்தவர்கள் என்பதால், உங்களுக்குக் கூடுதலான விளக்கம் தேவைப்படும் என நினைக்கிறேன்.

100 ரூபாய் உங்கள் ஊதியம் என்றால், அதன் உண்மையான மதிப்பைப் பின்வருமாறுதான் கணக்கிட வேண்டும்.
வருவாயில் பிடிக்கப்படும் வரி (TDS) – ரூ. 10 (சராசரி மதிப்பு)
தற்போதைய பணவீக்கம் தோராயமாக, 8.5% என்ற வகையில் – ரூ. 8.50
இந்த இரு பிடித்தங்களையும் உங்களால் தவிர்க்கவே இயலாது. ஏனெனில், இவை இரண்டும் அரசுத் துறைகளால் செய்யப்படுபவை. பணவீக்கம் என்பது என்னவென்றால், 100 ரூபாயில் ரூ.8.50 அளவிற்கு மதிப்பற்ற நிலை உள்ளது என்பதாகும். 100 ரூபாய் உங்களிடம் இருந்தால், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமைப்படி அதன் உண்மையான மதிப்பு, ரூ.91.50 மட்டும்தான். இதுதான் விலைவாசி உயர்வின் அடிப்படைக் காரணி. வரியைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆக, 100 ரூபாய் உங்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டால், அதன் மதிப்பு சராசரியாக, வெறும் ரூ.87 .50/- மட்டும்தான். ஒரு இலட்சம் ரூபாய் உங்களுக்குக் கிடைக்கிறதெனில், உண்மையில் நீங்கள் பெற்ற தொகை ரூ.ரூ.87,500/- மீதமுள்ள தொகையை வரியாகவும், பண வீக்கம் என்ற பேரில் பல்வேறு நிறுவனங்களும் பகிர்ந்துகொள்கின்றன.

நீங்கள் உழைக்கிறீர்கள், பணியாற்றுகிறீர்கள். உங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வருவாய் என்பது, உண்மையான மதிப்பே இல்லாத வெற்றுக் காகிதம். அந்தக் காகிதத்திற்கு என்ன மதிப்பு என்பதை அவ்வப்போது முடிவு செய்வதுதான் சேமவங்கி (ரிசர்வ் வங்கி) ஆற்றும் முதல் கடமை.

உங்களில் பெரும்பகுதியினர் கடன் பொருளாதாரத்தில் இருப்பதாக நினைக்கிறேன். வீடு, வாகனங்கள், செல்பேசிகள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் இப்போது கடனில் வாங்கப்படுகின்றன. அவற்றுக்கான வட்டி விகிதங்களை மேற்கண்ட 100 ரூபாயிலிருந்து கழித்துவிடுங்கள். தோராயமாக நீங்கள் செலுத்தும் வட்டி விகிதம் 14% என்றால், உங்கள் கையிருப்பு மதிப்பு ரூ.73.50/- உண்மையில் எல்லாக் கடன்களின் கூட்டு வட்டியும் மிக மிக அதிகமானவை. அது பெரும் கதை என்பதால், நீங்கள் நம்பிக்கொண்டுள்ளதைப்போலவே 14% என்ற கணக்கை மட்டும் கூறுகிறேன்.
தங்கம் வாங்கும் உன்னதப் பழக்கத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். தங்கத்தின் மதிப்பைத் தீர்மானிப்பவர்கள்தான் உலகெங்கும் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் ஒரு பவுன் தங்கம் இருந்தால், அதன் பண மதிப்பு என்ன என நீங்கள் முடிவு செய்ய முடியாது. இருபத்து இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து தங்கம் வாங்கிவிட்டால், இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து அதே தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும் என கற்பனை செய்யக் கூட உங்களுக்கு உரிமை இல்லை. ஐந்து ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்திருந்தால், இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். அதாவது, ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பை இந்தியப் பணம் இழந்துவிட்டது என்று பொருள். அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் சில அரபுநாடுகள்தான் இவ்வாறான பணமதிப்பை இழக்காமல் நீடிக்கின்றன. இந்தியப் பண மதிப்பு வீழ்ந்து வெகு காலம் ஆகிறது. இனி அது நிமிரும் வழி ஏதும் இல்லை.

தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்ற கதையை நீங்கள் இப்போதும் நம்புகிறீர்கள். நம் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு பவுன் தங்கத்தை விற்றால், ஒருவேலி நிலம் வாங்க முடியும். அப்போது தங்கத்தின் விலை 10 கிராம், ரூ.99/- அதாவது, ஒரு பவுனுக்கும் சற்று அதிகமான தங்கம் 100 ரூபாயை விடக் குறைவாகக் கிடைத்தது. 100 ரூபாயை வைத்து ஒருவேலி நிலம் வாங்க முடியும், ஒரு வீடு கட்ட முடியும், மாட்டு மந்தையை வாங்கலாம், இன்னும் பல மதிப்பு மிக்க செல்வங்களை ஒரு பவுன் தங்கத்திற்கு ஈடாக வாங்கலாம்.
இப்போது சில வளர்ப்பு நாய்களின் விலை ஒரு பவுன் தங்கத்தைவிட அதிகம். தங்கம் இப்போது செல்வமல்ல. அதை நீங்கள் எவ்வளவு சேர்க்கிறீர்களோ அவ்வளவு பணத்தை விரயமாக்குகிறீர்கள் எனப் பொருள். இன்னும் சில காலத்தில் ‘தங்கம் பதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று முதல் தங்கத்தின் மதிப்பு குறைக்கப்படுகிறது’ என்ற ஒற்றை அறிவுப்பு கூட அனைத்துச் சேமிப்புகளையும் முடித்து வைக்கும்.

தங்கத்தை வைத்து உங்களால் சுயமாக ஒரு நகை செய்ய முடியுமா? நகை ஆசாரிகள் இனமே ஏறத்தாழ அழிந்துவிட்டது என்பதைக் கவனித்ததுண்டா? இப்போது நீங்கள் வாங்கும் நகைகளை, பெரும் நகை வணிக நிறுவனங்களில் மட்டும்தான் மாற்றவோ, விற்கவோ முடியும். அவற்றை அழித்து வேறு நகை அல்லது பொருள் செய்ய வேண்டுமானால் அதற்கான மரபுத் தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்னும் சில காலத்தில் மிஞ்ச மாட்டார்கள்.
நகையை வைத்து என்ன செய்யலாம்? நகையை அடகு வைக்கலாம்.
உலகில் அதிகளவு தங்கம் வைத்திருக்கும் நிறுவனங்களில் இரண்டாவது இடம் வகிப்பது, முத்தூட் (Muthoot) என்பதை அறிவீர்களா?
இதன் பொருள் என்ன? எவ்வளவு அதிகமாக நகை வாங்குகிறீர்களோ அவ்வளவு வேகமாக அவற்றை அடகு வைக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் நகைக் கடன் வட்டி விகிதம் சட்ட விரோதமானது. ஏறத்தாழ 24% வட்டியை அந்நிறுவனம் நகைக் கடன்களுக்கு விதிக்கிறது. சட்டவிதிகளை ஏமாற்றுவதற்காக, நகைக் கடன் வட்டி என எழுதாமல், ‘நகை முன் பணம்’ என சீட்டு தருவார்கள்.

வீட்டு மனைகளை வாங்கிக் குவித்த கதை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. ஒரு வீடு கட்டுவதற்குக் கூட வங்கிகளில் கடன் வாங்கும் மக்கள், இரண்டு மூன்று வீட்டு மனைகளை வாங்கிப் போடுகிறார்கள். இவர்களது பொருளாதார அறிவை என்னென்று வியப்பது!

கடன் வாங்காமல் வீடு கட்ட வேண்டுமானால், குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்குப் பணம் சேர்க்க வேண்டும். பணத்தைப் பணமாக பத்தாண்டுகளுக்கு வைத்திருந்தால், அது பணம் அல்ல, பாதிக் காகிதம். ஏனெனில், பத்தாண்டுகளில் பணவீக்கத்தின் அளவும், இந்தியப் பொருளாதாரத்தின் சரிவும் கற்பனைக்கெட்டாத வகையில் இருக்கும். 1996 , 2006 ஆகிய ஆண்டுகளில் 100 ரூபாய்க்கு இருந்த மதிப்பையும், இப்போது இருக்கும் மதிப்பையும் நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். 2026 ஆம் ஆண்டு, 100 ரூபாய் எனும் ஒரு தாள் இருக்கவே வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, தெரியவில்லை!

ஆக, பணத்தைப் பணமாகச் சேர்ப்பதும் வீட்டில் காகிதக் குப்பைகளைச் சேர்ப்பதும் ஏறத்தாழ ஒன்றுதான். பணத்தைத் தங்கத்தில் போட்டால், தங்க நிறுவனங்கள் கொழிக்கும். பணத்தை வீட்டு மனைகளில் போட்டால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொழிக்கும், கட்டுமான நிறுவனங்கள் செழிக்கும், கடன் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கும்.

வங்கிகளில் சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி சராசரியாக 8% என்றளவில் உள்ளது. பணவீக்கமோ இந்த வட்டியை விடக் கூடுதலாக உள்ளது. அதாவது, உங்கள் சேமிப்பை வாங்கி வைத்துக்கொள்ளும் வங்கிகள், உங்களுக்கு அப்பணத்தின் உண்மை மதிப்பை விட குறைவாகத் திருப்பித் தருகின்றன.
500, 1000 ரூபாய்களை வங்கியில் கணக்கு காட்டினால் கருப்புப் பணம் ஒழியும் என்ற புதிய திரைப்படத்தை இரசிப்பவர்களிடம் ஒரு தகவலைக் கூற வேண்டும். கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருக்கிறார்களே, அவர்களில் பெரும்பகுதியினர் பின்வரும் ’தொழில்களில்’ ஈடுபடுவோர்தான்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நகை நிறுவனங்கள், வட்டிக்கு விடுதல், நிலவணிகம், அரசியல், மணல் கொள்ளை, மலைக்கொள்ளை, கட்டுமான ஒப்பந்தங்கள்.

மேற்கண்ட ‘தொழில்’களில் ஈட்டிய பணத்தைத்தான் அவர்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

இனிமேல் இவர்களிடம் கருப்புப் பணம் சேராது என்று கூறுமளவுக்கு சமூகத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது எனக் கூறுங்கள்.
’இனி என் பிள்ளைகளைப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கமாட்டேன். சேர்த்தாலும் சட்டப்படியிலான கட்டணம்தான் தருவேன்’ என எல்லோரும் முடிவு செய்துவிட்டீர்களா?
‘இனி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் தரமாட்டேன்’ என சத்தியம் செய்துவிட்டீர்களா?
‘இனி, என் வீட்டில் மலைக் கற்களை (கிரானைட்) பயன்படுத்தமாட்டேன். இனி கடனில் வீடு வாங்க மாட்டேன். இனி. வட்டிக்குப் பணம் வாங்க மாட்டேன். இனி தேவைக்கதிகமாக நகை சேர்க்க மாட்டேன். இனி, வணிகமயமான மருத்துவமுறைகளை நாட மாட்டேன்’ என்றெல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எல்லோரும் வகுத்துவிட்டீர்களா?
ஒருவேளை இவ்வாறெல்லாம் நடந்தால், நாட்டில் கருப்புப் பணம் இருக்காது.
எப்போதும்போலத்தான் மக்களது வாழ்க்கைமுறை இருக்குமென்றால், கருப்புப் பணம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது.
என் கருத்துகளுடன் உடன்படுவோருக்கு நான் கூற விரும்பும் சேதி மிகச் சுருக்கமானது.

‘சமூகத்தில் நிகழ்ந்த எல்லா சீரழிவுகளையும் அனுமதித்துவிட்டு, அச்சீரழிவுகளில் தெரிந்தும் தெரியாமலும் பங்காளியாகவும் இருந்துகொண்டு, சிக்கல்களைக் கண்டு கொந்தளிப்பது வீண் செயல். எப்போது உங்களால் நிறுவனங்கள் இல்லாத வாழ்க்கையைச் சிந்திக்க முடிகிறதோ அப்போதுதான், செல்வம் சேரும். அதுவரை வெறும் காகிதங்களையும் கடன் அட்டைகளையும்தான் வைத்திருக்க வேண்டும்’

’வங்கிகளில் கணக்கு காட்டாமல் இனி பணத்தை வைத்திருக்க முடியாது’ என பெருமிதமாகப் பேசுவோருக்கு ஒரு சிறு தகவல். ‘இந்திய வங்கிகளில் உள்ள வராக் கடன் தொகையின் அளவு 3 இலட்சம் கோடி’. அதாவது, வாங்கிய கடனைத் திருப்பித் தராத நிறுவனங்களுக்கு இந்தியாவின் அரசு வங்கிகள் இதுவரை வாரிவழங்கிய தொகை, 3 இலட்சம் கோடி ரூபாய். விஜய் மல்லையா போன்ற ‘ஏழைகள்’ அந்தப் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.
நம்புங்கள், இந்தியாவின் அரசு வங்கிகள் ’முறையாக’ச் செயலாற்றி, கணக்கு கேட்டு, கருப்புப் பணத்தை ஒழித்துக்கட்டப்போகின்றன! அந்த நம்பிக்கையுடன் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கையை நடக்கட்டும்!

ஜெய்ஹிந்த்!

Published on : 10/11/2016

Tuesday, December 6, 2016

உங்களை எவர் எரிக்கப் போகிறார்கள்?

உங்களை எவர் எரிக்கப் போகிறார்கள்?
இந்தச் சமூகம்தான் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டதே!
- கருப்புப் பண நாடகம் குறித்து

’எல்லாப் பரிமாற்றங்களையும் வங்கிகள் வழியாக மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு என்னதான் சிக்கல்?’ என இந்திய அரசின் பொருளாதாரச் சாத்தான்கள் கேள்வி எழுப்புகின்றன. ‘எல்லா வங்கிகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறீர்களே... எங்கள் பணத்தை எல்லாம் வங்கியில் போட்டுவிட்டு எவரிடம் கேட்பது?’ என்பது நாம் கேட்க வேண்டிய எதிர்க் கேள்வி.

இந்திய அரசின் வங்கிகளில் வெறும் 33% அரசின் பங்குகள் இருந்தால் போதும் என்பதுதான் இப்போதுள்ள கொள்கை. இந்தக் ’கொள்கையை’ அவர்கள் மிக நிதானமாகவும் அழுத்தமாகவும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான பங்குகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அந்த வங்கியில் பணத்தைச் செலுத்தும் மக்களின் நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது.

இப்போதுள்ள தனியார் வங்கிகளின் கடன் கொள்கைகள் மிகக் குரூரமானவையாக உள்ளன. வீட்டுக் கடன், வாகனக் கடன், வேளாண் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட அடிப்படையான பொருளாதாரத் தேவைகளுக்கு இவ்வங்கிகள் விதிக்கும் உண்மையான வட்டி விகிதம் குறைந்தபட்சம் 40%. இதற்குக் கூட்டு வட்டி அல்லது மறைமுக வட்டி எனப் பெயர். புறத் தோற்றத்தில் 12% வட்டி விகிதம் காட்டப்படும். தவணை செலுத்தா காலங்களுக்கான அபராதம், வட்டி மீது விதிக்கப்படு வட்டி ஆகியவை கடன் தொகையை மிக அதிகமாக உயர்த்திவிடுபவை.

வீடு, வாகனம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் காலத்திற்கேற்ப அதிகரித்து விடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் 15% என்றால் ஏதேனும் ஒரு சூழலில் அதை, 20% என்று மாற்றும் உரிமை வங்கிகளுக்கு உண்டு.

பணமதிப்புக் குறைவு, பொருளாதார மந்தம் ஆகிய சூழல்களில் இவ்வாறு வட்டி விகிதத்தை உயர்த்துவது வங்கிகளின் நடைமுறை. தனியார் வங்கிகளில் வேளாண் கடன் வாங்கிவிட்டு, நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்வோரை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள். டிராக்டர் வாங்கிய கடனில் தவணைத் தொகையைத் தராத விவசாயி அவரது சொந்த ஊரில் சொந்த நிலத்தில் உள்ளூர் காவல்துறையினரால் அடித்து அவமானப்படுத்தப்பட்டதை மறந்துவிடாதீர்கள். அரசு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் மராட்டியத்தில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இருக்கும் பணத்தை எல்லாம் வங்கிகளில் செலுத்திவிட்டு நிம்மதியாக உறங்கலாம் என எவரேனும் நினைத்தால், அவர்கள் என் சொற்களை வீசி எறியலாம். எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையினாலும் சக மனிதர்கள் மீதுள்ள அன்பினாலும் என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பெருநிறுவனங்களை நடத்துவோருக்குப் பணம் தேவையில்லை. வெறும் இணையப் பரிமாற்றத்தில் அவர்களால் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அவர்கள் கொள்ளையடிக்கும் நம் செல்வங்களைப் பணமாக வைத்திருப்பதில்லை. அந்தக் காலம் கரையேறி விட்டது. உங்களுக்கும் எனக்கும் பணம் வேண்டும்.

’எல்லாப் பரிமாற்றங்களையும் வங்கிகள் வழியாக நடத்தினால் கருப்புப் பணம் ஒழியும்’ என்று கூறுவது நமது எதிர்காலத்தைச் சூறையாடும் சதி. ’எல்லா வங்கிகளும் தனியார்மயம்; எல்லோருடைய பணமும் வங்கிகள் வசம்’ என்ற சிந்தனை ஈமு கோழி கொள்ளையைவிட ஆபத்தானது.
கிரீஸ் நாட்டுப் பொருளாதாரம் பிச்சைப் பொருளாதாரமாக மாறியது, தனியார்மயத்தின் விளைவு. தாய்லாந்தும் இந்தோனேசியாவும் அயல்நாட்டுப் பயணிகளின் உல்லாச விடுதிகளாக மாறியது தனியார்மயத்தின் விளைவு. அமெரிக்காவின் கடன் சுமை தாங்கவியலாத நிலையை எட்டியுள்ளது தனியார்மயத்தின் விளைவு.

மருத்துவம் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் நோயாளிகள் அதிகரித்தனர். வேளாண்மையில் பெறுநிறுவனங்கள் வந்த பின்னர் உணவு நஞ்சானது, வேளாண்மை கடன் சுமக்கும் தொழிலானது. கல்வியில் தனியார்மயம் திணிக்கப்பட்ட பின்னர், கடனாளிகள் அதிகரித்தனர். வங்கிகள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், சொந்த நிலங்களை விற்றுவிட்டு நகரங்களுக்குக் குடியேறும் மக்கள் அதிகரித்தனர். காப்பீட்டு நிறுவனங்களில் தனியார் நிறுவனங்கள் நுழைந்த பின்னர், இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது.
இப்போது இந்தியாவின் இராணுவத்திலேயே தனியார் பெறுநிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் யாவும் அதிவேகமாகத் தனியாருக்கு வாரி வழங்கப்படுகின்றன.

’எல்லோருக்கும் வங்கிக் கணக்கு’ என்னும் வாசகம் எல்லோருடைய சிறு சேமிப்புகளையும் வங்கிகளின் வயிற்றுக்குள் புதைக்கும் நோக்கம் கொண்டது. இந்த நிலைமையை அனுமதித்தால், நம் வீடுகளில் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதும் சட்ட விரோதம் எனும் நிலைமை உருவாகும்.
நகை வாங்குவதற்கும் இனிமேல் வரிக் கணக்கு அட்டை (Pan) வேண்டும் என்று இப்போது அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து நடைமுறைக்கு வந்தால், நீங்கள் வாங்கும் நகைகளுக்கு வரி செலுத்துவதோடு நில்லாமல், குறிப்பிட்ட அளவுக்கு மேல் நகையை வீட்டில் வைக்க முடியாத நிலைமையும் உருவாகும். ஏற்கெனவே, இதற்கான அறிகுறியை இந்திய அரசு வெளிப்படுத்திவிட்டது. ‘வீட்டில் உள்ள தங்க நகைகளை அரசிடம் கொடுத்து வையுங்கள். தேவைப்படும்போது வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூவத் துவங்கிவிட்டார்கள்.

பணம் இல்லாப் பொருளாதாரத்தின் மையக் கருத்து என்னவெனில், ‘ஒவ்வொரு மனிதரின் அன்றாட வாழ்க்கையும் நிறுவனங்களைச் சார்ந்து மட்டும்தான் அமையும்’ என்பதாகும்.

பொதுத்துறை வங்கிகளிலேயே பல்லாயிரம் ஊழல்கள் நடக்கின்றன. நமது பொருளாதாரத்தை எல்லாம் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கிவிட்டு ‘வாராக் கடன்’ எனும் பட்டியலில் சேர்த்துவிடுகின்றன அவ்வங்கிகள். அவர்கள் வாரிக் கொடுக்கும் பணம் நமது வியர்வையின் விளைச்சல் என்பதையும், ‘வாராக் கடன்’ என்ற பேரில் அயல்நாட்டு வங்கிகளில் பண்ணைகளில் விடுதிகளில் புழங்கும் ஒவ்வொரு ரூபாயும் நம் உதிரத்தின் விளைவுகள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இதோ இந்த ‘அதிர்ச்சித் தாக்குதலில்’ வங்கிகளில் கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படவே இல்லையா? 20 முதல் 40%வரை பங்கு பெற்றுக்கொண்டு கருப்பை வெள்ளையாக மாற்றும் அதிகாரிகள் இல்லையா, அமைச்சர்கள் இல்லையா?

திரைப்படம், அரசியல் ஆகிய இருதுறைகள்தான் கருப்புப் பணத்தின் தாயும் தந்தையும். இவ்விரு துறைகளில் உள்ளவர்கள் எல்லோரும் ‘கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இதுதான் சரியான நடவடிக்கை’ என்கிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் எல்லோரும் வங்கிகள் வழியாக மட்டுமே வாழ்கிறார்களா?
’ஒரு நாளைக்கு நான்காயிரம் ரூபாய் மட்டும்தான் தருவோம்’ என்று அரசாங்கம் அறிவிக்கிறது. பேட்டி கொடுக்கும் உத்தமர்கள் தங்கள் வீட்டு நாய்களுக்கும் பூனைகளுக்கும் இதைவிட அதிகமாகச் செலவு செய்வார்கள். திருமணத்தை அறிவித்துவிட்டு தாலி வாங்கப் பணம் இல்லை எனக் கதறும் மக்களது குரல் இங்கே அலட்சியப்படுத்தப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கருப்புப் பணத்தால் அலங்கரிப்போரது தேசபக்தி முழக்கங்கள் அளவுக்கதிகமாக விளம்பரம் செய்யப்படுகின்றன.
ஒரே ஒரு அறிவிப்பு நம் பணத்தை முடக்கிப் போடும் என்றால், இன்னும் வரப்போகும் பல அறிவிப்புகள் நம் எதிர்காலத்தை முடக்கும் என்பதை உணருங்கள்.

இங்கே வருமான வரித்துறை இருக்கிறது.
பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு இருக்கிறது. பல்வேறு உளவுப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தத் துறைகள் எல்லாம் களத்தில் இறங்கி நேர்மையாகச் செயலாற்றினால், நாட்டில் உள்ள எல்லாக் கருப்புப் பணத்தையும் மீட்பதற்கு ஒரே ஒரு நாள் போதும். அவர்களது நோக்கம் கருப்புப் பண ஒழிப்பாக இருந்தால், இதைத்தான் செய்வார்கள். நாட்டில் உள்ள பெரும்பகுதி மக்களுடைய பொருளாதாரத்தை நிறுவனங்கள் சார்ந்த வகையில் மாற்றி விடுவதுதான் அவர்களது நோக்கம்.

நண்பர்களே, இந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் நமது சந்ததியினரின் வாழ்க்கை அடிமைகளின் கூடத்தில்தான் அமையும். இனி உங்களால் நிம்மதியாக நிலம் வாங்க முடியாது, நகை வாங்க முடியாது.
வருமான வரியைப் பிடித்துக்கொண்டுதான் ஊதியம் தருகிறார்கள். உற்பத்தி, விற்பனை, சேவை வரிகளைப் பிடித்துக்கொண்டுதான் பொருட்களை அனுமதிக்கிறார்கள். ஒரு பைசா செலவிட்டாலும் அதில் பாதிக்கும் மேல் மறைமுக, நேர்முக வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். பொது இடங்களில் மூத்திரம் போனால் கூட வரி செலுத்திக்கொண்டுதானிருக்கிறோம்.
தண்ணீருக்கு வரி, சாலைகளில் ஒளிரும் விளக்குகளுக்கு வரி, நெடுஞ்சாலைப் பயணத்திற்கு வரி, சொத்துகளுக்கு வரி, வாகனங்களுக்கு வரி, உணவில் வரி, செல்பேசிக் கட்டணங்களில் வரி, வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
இவ்வளவு பணமும் எங்கே போகிறதென்றால், பெறுநிறுவனங்களுக்கு மானியங்களாகப் போகிறது. பல இலட்சம் கோடிகளை இந்திய அரசு, நிறுவனங்களுக்கான மானியமாக அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இங்கே என்ன நிலைமை என்றால், ‘அரசியல்வாதிகளுடனும் அரசாங்கத்துடன் பங்குபோட்டுக் கொள்ளையடித்தால் அது வெள்ளைப் பணம். சொந்தமாகச் சம்பாதித்துச் சேர்த்தால் கருப்புப் பணம்’. இப்போது, மேற்படி வெள்ளைப் பணக்காரர்கள் சங்கடமே இல்லாமல் சிரிக்கிறார்கள். உழைத்துக் களைத்த கூட்டம் வரிசையில் நின்றுகொண்டு அவமானப்படுகிறது.
‘என்னை எரித்தாலும் கவலைப்பட மாட்டேன்’ என்று ஒருவர் அழுகிறார். ஏற்கெனவே உங்கள் நடவடிக்கைகளால் எரிந்துபோனவர்களும், தூக்கில் தொங்கியவர்களும், நஞ்சு குடித்தவர்களும் உடலற்ற பேய்களாக அலைகிறார்கள். இதோ இந்த மாபெரும் சமூகம் கையில் பணமில்லாமல், உடல் இருந்தும் பேய்போல திரிகிறது.

நீங்கள் லேசாகக் கண் கலங்கினால் கூட, அது சர்வதேசச் செய்தி. எங்களைப் போன்ற எளியோர் கதறி அழுதாலும், துடைத்து விடகூட ஆளற்ற அனாதைப் புலம்பல். உங்களை எவர் எரிக்கப் போகிறார்கள்? இந்தச் சமூகம்தான் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டதே!

இந்த நாடகங்களைக் கண்டு கண்கலங்கினால், நம் பிள்ளைகளின் ஒருவேளை உணவையும் தனியார் வங்கிகள் பிச்சைபோடும் நிலைமை வரும்.

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால், ஏற்கெனவே இருக்கும் பொருளாதாரத் துறைகளைக் களத்தில் இறக்கட்டும். அவர்களுக்கு நாமும் துணை நிற்கலாம்.

இப்போதைய நடவடிக்கைகள் நமக்கு எதிரானவை.
இறுதியாக, நம் சமூகத்தவரிடம் நான் முன்வைக்க விரும்பும் கருத்து இதுதான். ’பணம் இல்லாப் பொருளாதாரம்’ என்ற சதிகாரச் செயல்திட்டத்தை நிராகரிக்கத் தவறினால், நமது எதிர்காலம் மீளவியலாத நரகமாக மாறிப்போகும்.




Published on 14/11/2016

கடந்த காலத்தில் வாழ்ந்தபோது எழுதப்பட்டது!

அந்த நாட்களில் அவர்கள் பொய்களை நம்புவார்கள், உண்மைகளைச் சந்தேகிப்பார்கள்.

அந்தக் காலம் நன்மைகளுக்கு ஒவ்வாததாகவும், பாவங்களுக்குப் பக்கபலமாகவும் அமையும்.

அவர்கள் தமக்குள் மோதிக்கொள்வார்களே தவிர, சதிகாரர்களுக்கு எதிராக ஒரு கேள்வியையும் எழுப்ப மாட்டார்கள்.

அறிவைக்கொண்டு வளர்த்த தேசங்கள், அறிவால் அழிக்கப்படும். மனதால் கட்டிய இல்லங்கள், மனதால் காக்கப்படும்.

தமது ஊன் பொசுங்கிக் கருகும் வரை, தீயின் வெம்மையை அவர்கள் உணரப் போவதில்லை. தமது குடல் வற்றி வெடிக்கும் வரை, நீரின் தேவையை அவர்கள் அறிவதுமில்லை.

அமுதாகிய மழை நீர் கற்பாறைகளில் ஒட்டாமல் தெறித்துவிழுவதைப் போல, நன்மைகளைப் பேசுவோர் அவர்களிடமிருந்து விலகி நிற்பார்கள்!

உண்மைகளைப் பேசுவோர் அமைதியை போதிப்பார்கள். இவர்களோ, வன்முறைக்காரர்களின் தலைமையை ஆரவாரித்து ஏற்பார்கள்.

புவியெங்கும் நிலம் நடுங்கினாலும், கடல் பொங்கினாலும், நீர் வற்றினாலும், காற்று சுழற்றினாலும், வெம்மை பொசுக்கினாலும் அவர்களது கவனம் செல்வத்தின் மீதே இருக்கும்.

முதலில் செல்வத்தை இழப்பார்கள். பின்னர், உணவையும் நீரையும் இழப்பார்கள்.

ஒரே ஒரு கணம் நின்று நிதானித்து, ‘என்ன நடக்கிறது உண்மையில்?’ எனச் சிந்திப்போர் இறைக் கரங்களால் அரவணைக்கப்படுவார்கள். ஆனால், அவ்வாறு சிந்திக்க விடாதவகையில் குழப்பங்களும் கூச்சல்களும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

கூச்சல்களின் ஊடாக உண்மையை நாடத் தெரிந்தோர் தப்பிக்கும் வழியைக் கண்டடைகிறார்கள். குழப்பங்களின் ஊடாக தெளிவைக் காணத் தெரிந்தோர், இறைவழியைக் கண்டுகொள்கின்றனர்.

அநீதிகளுக்கு எதிராகப் பேசவும் சிந்திக்கவும் செயல்படவும் அவர்களுக்கு மட்டும் ஆற்றல் இறக்கப்படும்.

பஞ்சம் வந்த ஊரில் கிணறுகளின் மீதுதான் முதல் தாக்குதல் நடக்கும். அட்டூழியங்கள் மிகுந்த அக்காலத்தில், நன்மை பேசுவோரின் அடையாளங்கள்தான் குறிவைக்கப்படும். ஆகவே, அவர்கள் தமது ஆடைகளை அகற்றிவிட்டு அம்மணமாகிறார்கள். அடையாளங்களைத் துறந்துவிட்டு அடைந்துகொள்கிறார்கள்.

அநீதிக்காரர்களின் வார்த்தைகள் ஒருநாளில், அச்சுறுத்தும். மறுநாளில் இன்புறுத்தும்.

நடப்பது நன்மையா தீமையா எனப் புரிந்துகொள்ளாமல், அந்தக் கூட்டம் சிரிக்கும், அழும்.

சுமப்பது பொக்கிசத்தையா பாவச் சுமையையா என்பதே புரியாமல், அந்தக் கூட்டம் குதிக்கும், சறுக்கும்.

சற்றே திரும்பிப் பார்த்தால், துன்பமற்ற பாதைகள் தெரியும். ஆனால், அக்கூட்டத்தின் பெரும்பகுதியினர் திரும்பமாட்டார்கள்.

அந்தக் காலத்தின் இறுதி நாட்கள் நரகத்தின் இறுதியாகவும், சுவர்க்கத்தின் துவக்கமாகவும் அமையும்.



Published on 17/11/2016 

65,000 கோடி ரூபாய்…..! - வரி செலுத்துவதைப் பற்றிய திரைக்கதையிலிருந்து சில காட்சிகள்

எனது சட்டையின் விலை 10 இலட்சம் ரூபாய் அல்ல. என் வயதான தாயை நான் வங்கி வரிசையில் நிற்க வைக்கவும் இல்லை. அதைப் படம் பிடித்துக் காட்டி நாடகம் நடத்தவும் இல்லை. நேரடியாகச் சொல்வதானால், பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டையை அணிந்துகொண்டு, தன் தாயை வெறும் 2000 ரூபாய்க்காக வங்கியில் காக்க வைக்கும் ‘சாமானியன்’ அல்ல நான்.

நீங்களும் இவ்வாறான ‘சாமானியர்கள்’ அல்ல என நினைக்கிறேன். நாம் உண்மையான சாமானியர்கள். இந்த நாடு, போலித்தனமான சாமானியர்களால் ஆளப்படுகிறது, உண்மையான சாமானியர்களால்தான் உயிரோடு இருக்கிறது.

நாட்டில் வருமான வரி ஏய்ப்பு நடப்பதாகவும், இப்போது நடத்தப்படும் நாடகம் அந்த வரி ஏய்ப்பை ஒழிக்கும் எனவும் ஒரு பொய்யைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். இந்த நாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றியபோது இதையெல்லாம் அவர்கள் கூறவில்லை. ‘கருப்புப் பண முதலைகளை’ ஒழிக்கும் நாடகம் இது என்றார்கள். இப்போது, ‘வருமான வரி செலுத்துவோராக அனைவரையும் மாற்றுவதுதான் நோக்கம்’ என்கிறார்கள். இந்த நாடகத்தை தயாரித்து இயக்குபவர்களின் முழு நேரத்தொழிலே பொய் பேசுவதுதான் என்பதால், வசனத்தை மாற்றிப் பேசுவதைப் பற்றிய வெட்கம், கூச்சம் அவர்களுக்கு இருக்காது.

ஆனால், மானம் மரியாதை உள்ள நமக்கு இந்த வசனங்கள் முக்கியமானவை. நாம் உண்மையை நாடுவதற்காகப் பிறவி எடுத்துள்ளோம் என நான் உறுதியாக நம்புகிறேன். சில உண்மைகளை உங்கள் கைகளில் ஒப்படைக்க விரும்புகிறேன்.

நாட்டின் வரி வருவாய், பொதுவாக இரு வகைப்படும். நேரடி வரி, மறைமுக வரி ஆகியன அவை. வருமான வரி என்பது நேரடி வரிப் பிரிவில் உள்ளது. உங்களது வருவாயிலிருந்து அரசு வரியைப் பிடித்துக்கொள்ளும். இப்போது நியாயவான் வேடம் போட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர்தான் இத்திட்டத்தை அறிமுகம் செய்தார். சம்பளம் கொடுக்கும்போதே, ஏறத்தாழ 20 சதவீதம் வரை வரிப் பிடித்தம் செய்யப்படும். சராசரியாக, 10 சதவீதம் வரிப் பிடித்தம் நடக்கிறது.

வணிகம் மற்றும் தொழில் செய்வோர் தங்கள் வருமானத்தைக் கணக்கில் காட்டி அதற்கேற்றவாறு ஒவ்வோர் ஆண்டும் வரி செலுத்த வேண்டும். சம்பளம் வாங்குவோர், வணிகம், தொழில் செய்வோர் தவிர வேறு பிரிவினர் பொதுவாக வருமான வரியில் வருவதில்லை.

விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், மீனவர்கள், வேளாண் பொருள் சிறு விற்பனையாளர்கள் மற்றும் இதர கூலித் தொழிலாளர்கள் மேற்கண்ட இரு வகைகளிலும் வருவதில்லை. அவர்களது வருவாய் எவ்வளவு எனக் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இது இந்த நாடகம் துவங்கும் முன் இருந்த நிலை.

இப்போது வரிசையில் நிற்கும் மக்களில் மிகப் பெரும்பகுதியினர்,
சம்பளம் வாங்குவோர், வணிகம் மற்றும் தொழில் செய்வோர், கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர்தான் என்பதை நீங்கள் நேரடியாகவே காணலாம். இவர்களில் மூன்றாவது பிரிவான அடித்தட்டு மக்களை ஒதுக்கிவிடுங்கள். முதல் இரு பிரிவினராகிய சம்பளம் பெறுவோர் மற்றும் தொழில் வணிகர்கள் அனைவரும் ஏற்கெனவே, வருமான வரி செலுத்திக்கொண்டுள்ளவர்கள்தான்.

இவர்கள் ஒழுங்காக வருமான வரி செலுத்தவில்லை என்று அரசு நினைத்தால், வருமான வரித்துறையின் வழியாக மட்டுமே, நடவடிக்கை எடுக்க முடியும். ’உங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் செல்லுபடியாகாது’ என்ற குலை நடுக்க வசனத்தை உச்சரித்து மிரட்டத் தேவையில்லை. இப்போது விரலில் மை வைத்துக்கொள்வோரில் கணிசமானோர், ஏற்கெனவே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டவர்கள்தான் என்பது இந்த நாடகத்தின் இழிவான காட்சி.

வணிகம், தொழில் செய்வோர் முறையாகக் கணக்கு காட்டவில்லை என்றால், அவர்களது நிறுவனங்களை வருமான வரித்துறையால் எந்த நேரத்திலும் சோதிக்க முடியும். அமுலாக்கத் துறை என்ற தனிப் பிரிவு இப்பணியைச் செய்து முடிக்கக் கூடும்.

சம்பளம் வாங்குவோரும், வணிகம், தொழில் செய்வோரும் வங்கிகளில்தான் பணத்தைப் போட்டு வைக்க வேண்டும். வீடுகளில் வைத்திருக்கக் கூடாது என்று நெருக்கடி தர வேண்டிய அவசியம் என்ன?

இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து, நிலம் வாங்குகிறார்கள் என்றால் அதற்கும் வரி செலுத்தித்தான் தீர வேண்டும். நகைவாங்கினால், அதற்கும் வரி செலுத்துகிறார்கள். வாகனங்கள் வாங்கினாலும் வரி செலுத்துகிறார்கள். வீடு வாங்கினாலும் வரி செலுத்துகிறார்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு மிட்டாய் வாங்கினாலும் அந்த ஒரு ரூபாயில் விற்பனை வரியும் இருக்கத்தான் செய்கிறது.

பணத்தை வெளியே எடுத்துச் செலவு செய்தால் அரசாங்கம் விதிக்கும் மறைமுக வரிவிதிப்பு இருக்கத்தான் செய்யும். வரியே செலுத்தாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களைக் கண்காணிக்கத்தான் விற்பனை வரித்துறையும் அத்துறையில் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
ஆக, பணத்தைக் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் மனநோயாளிகள் இவர்கள் அல்லர். அந்த மனநோயாளிகள் எல்லோரும் அரசியல் கட்சிகளில், திரைத்துறையில், இயற்கைவளக் கொள்ளைத் துறைகளில் இருக்கிறார்கள். அவ்வாறான மனநோயாளிக் கூட்டத்தினரின் ஒரே ஒரு உறுப்பினரைக் கூட வங்கி வரிசையில் காணவில்லை.
வங்கிகளிலும் ஆட்சி பீடத்திலும் உள்ள சக மனநோயாளிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, 40% வரை கழிவு கொடுத்து தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிவிட்டார்கள் அவர்கள். வங்கிகள் எல்லாம் புனிதத் தலங்கள் போலவும், அதன் உயர்மட்டத்தினர் எல்லோரும் தேவதூதர்கள் போலவும் இந்த நாடகம் சித்தரிக்கிறது.

சென்னையின் எல்லாச் சாக்கடைகளும் கூவத்தில் கலப்பதுபோல, நாட்டின் எல்லா ஊழல்களும் வங்கியில்தான் கலக்கின்றன.

’வங்கிக் கணக்கில் பணத்தைக் கொண்டு வருவதில் உங்களுக்கு என்ன சிக்கல்?’ எனக் கேட்கிறார்கள் நாடகத்தின் கோமாளி வேடம் அணிந்த தலைவர்கள். என்ன சிக்கல் எனச் சொன்னால் நீங்கள் திருந்திவிடுவீர்களா அல்லது இதுவரை செய்த பாவங்களைக் கழுவிவிடுவீர்களா?

’அதானி குழுமம் மட்டும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடன் ரூ.72,000 கோடி. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இந்திய பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையும் ரூ.72,000 கோடி’
-இல்லை என்று மறுக்க முடியுமா நாடகக்காரர்களே!

இந்த நாட்டின் மக்களுக்கு உணவு கொடுக்கும் கோடிக்கணக்கான எளியோருக்கு வழங்கிய தொகையை, ஒரே ஒரு நிறுவனத்திற்கு வாரிக்கொடுத்திருக்கிறீர்களே உங்களை நம்பி எப்படி எங்கள் பணத்தைக்கொண்டு வந்து கொட்டுவது?

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியும் 10 இலட்சம் ரூபாய்க்கு சட்டை போடும் சாமானியரும் நெருங்கிய நண்பர்கள். சாமானியர் பயணிக்கும் எல்லா நாடுகளுக்கும் அவரது நண்பரும் பயணிக்கிறார். நீங்கள் எங்களிடம் கூறுகிறீர்கள், ‘அரசுக்கு வரி செலுத்துங்கள்’ என்று.
கூலித் தொழிலாளிகளும் சிறு வணிகர்களுமாகிய அந்த மூன்றாம் வகையினர்தான் என்னைப் போன்ற உண்மையான சாமானியர்களுடன் வாழ்பவர்கள். எங்கள் வருமானத்தை அவர்களுக்குச் சம்பளமாகத் தருகிறோம். அவர்களிடம்தான் காய்கறி வாங்கிக்கொள்கிறோம். அவர்களது கூரைக் கடைகளில்தான் சாப்பிடுகிறோம்.

இனி அவர்களும் தங்கள் சேலை முடிச்சுகளில் உள்ள பணத்தை வங்கிகளில் கொட்ட வேண்டும். அவர்களது வருவாயும் கேள்விகளுக்குள்ளாக்கப்படும். அவர்களும் வரி செலுத்த வேண்டும். ‘காயகறிக்காரராக இருந்தாலும் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்’ எனக் கூச்சலிடும் தேசபக்திக் கோமாளிகளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்கள், ரிலையன்ஸ் மார்ட்டின் காய்களையே வாங்கட்டும், பகட்டுத்தனமான உணவகங்களிலேயே சாப்பிடட்டும், ’உயர்தர’ மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் திருந்துவார்கள் என நினைக்காதீர்கள்.

தீமைக்கு முட்டுக்கொடுப்போரது முதுகெலும்புகள் தீமைகளின் வலிமையாலேயே முறிக்கப்படும். அவர்கள் எந்த தீயில் எண்ணெய் வார்க்கிறார்களோ அந்தத் தீயே அவர்களை அழிக்கும்.

நாம் உண்மையான சாமானியர்கள் அல்லவா. அதனால் ஒரு சில புள்ளி விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 2014 – 15 நிதியாண்டில் இந்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய வரிச் சலுகைகளின் மதிப்பு: ரூ. 65, 067 கோடி.

அதே நிதியாண்டில் இந்திய அரசு விவசாயத்துறைக்கு ஒதுக்கிய தொகை: ரூ. 35, 984 கோடி.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை: ரூ. 38,500 கோடி.

உணவு கொடுப்போருக்கும் கூலி வேலை பார்ப்போருக்கும் ஒதுக்குவதை விட இரு மடங்கு அதிகமாக கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக அளித்துள்ள நாடு இது.

இந்த நாட்டில்தான் சாமானியர்கள் வங்கிகளில் காத்துக் கிடக்கின்றனர். காய்கறிக் கடைகளில் உள்ள தாத்தா பாட்டிகள் கையில் புத்தம் புதிதாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் தாள் இருக்கிறது. அவர்களிடம் வாங்குவோரிடமும் அதேதான் இருக்கிறது.

‘எதற்காக எங்களை வதைக்கிறீர்கள்?’ எனக் கேட்டால் அவர்கள் கூறுகிறார்கள், ‘நீங்கள் வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறீர்கள். உங்களை எல்லாம் வரி செலுத்த வைக்கத்தான் இந்தத் திட்டம்’ என்று.
போலிச் சாமானியர்களே,

இந்த நாடு உண்மையான சாமானியர்களின் வியர்வையில்தான் உயிர் வாழ்கிறது. அவர்களது கையிருப்பையும் வங்கிகளின் வாய்க்குள் திணிக்க வைக்கிறீர்கள். சத்தியமாகச் சொல்கிறேன். இந்தப் பணத்தை வைத்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவும் உங்களை நாசமாக்கும்!







Published on 21/11/2016

உங்களைக் கெடுப்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை! -அரசியல் அறிவீர்

உங்களைக் கெடுப்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை!
-அரசியல் அறிவீர்

இப்போது அறுபதுகளில் இருக்கும் பெரும்பாலானோர் வெறுக்கும் வார்த்தை ஒன்றைப் பற்றிய கட்டுரை இது. ஆகவே, அவர்கள் இக்கட்டுரையின் இரண்டாம் பத்திக்கு மேல் பயணிக்க வேண்டாம். ஒருவேளை, மீறிப் பயணித்தால் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ‘நான் உங்கள் பிள்ளைகளைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, ஊதாரியாக்குவதற்காக எழுதுகிறேன்’. ஆம்! இந்தக் கட்டுரையின் வழியாக உங்கள் பிள்ளைகளிடமும், பேரப் பிள்ளைகளிடமும் நான் பேசப் போவது, ‘அரசியல்’!

இந்த வார்த்தையை நீங்கள் எவ்வளவு மோசமாகச் சித்தரித்தீர்கள்? இந்த வார்த்தை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக எவ்வளவு போராடினீர்கள், கண்ணீர் வடித்தீர்கள்? உங்கள் போராட்டங்களின் விளைவாகத்தான் இப்போது குடும்பம் குடும்பமாக வங்கி வாசலில் காத்திருக்கிறோம். கல்லூரிக் காலங்களில் அரசியல் பேசுபவர்களிடம் உங்கள் பிள்ளைகள் பழகினால், ‘உன்னைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க வந்திருக்கிறான் அவன் /அவள்’ என்று ஏசினீர்களே. ’தேர்தலில் வாக்களிப்பது ஒன்றுதான் ஒரே அரசியல் கடமை’ என்ற மூடநம்பிக்கையைப் பிள்ளைகள் மனதில் புகுத்தி அவர்களது கேள்வி கேட்கும் ஆற்றலை மழுங்கடித்தீர்களே, நான் அந்த ஆற்றலைக் கூர் தீட்ட எழுதுகிறேன்.

என் மீது உங்களுக்குக் கோபம் வரட்டும், எனக்குக் கவலையில்லை. உங்கள் கோபத்தைவிட, இந்தத் தலைமுறையின் மீது தொடுக்கப்பட்டுள்ள சாபம் கொடூரமானது.

‘அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் காரணமாக இந்தியாவில் அரிசி, எண்ணெய் விலை உயர்வு’, ‘ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம்’, ‘இனி அனைவரும் பணமில்லாத பொருளாதாரத்திற்கு மாற வேண்டும்’ ‘இனி உங்கள் நகைகளின் மீதான கண்காணிப்பு அதிகமாகும்’, ‘இனி எரிவாயு மானியம் குறைக்கப்பட்டு நிறுத்தப்படும்’, ‘இனி கல்வி மருத்துவம் ஆகிய துறைகளுக்கான மானியங்கள் நிறுத்தப்படும்’ – இவை போன்ற செய்திகளைப் படித்திருப்பீர்கள். இந்த எல்லாச் செய்திகளின் அடிநாதம் ஒன்றுதான், ‘இனி இந்த நாட்டை ஆளப்போவது, பெருநிறுவனங்கள் மட்டும்தான்’.

1991 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசியல் களத்தில் மிக அதிகமாகப் புழங்கிய சொல், ‘உலகமயம் / தாராளமயம்’ என்பது. இந்தியா போன்ற மரபுச் செழுமை மிக்க நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய திட்டம் அது. இந்தத் திட்டத்திற்காக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு, ‘உலக வர்த்தக அமைப்பு’ (WTO – World Trade Organization). இந்த அமைப்பு 1995 ஆம் ஆண்டு முதல்தான் செயல்படத் துவங்கியது. ஆனாலும், இந்த அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் 1991 ஆம் ஆண்டிலிருந்தெ வெளிப்படையாகத் துவக்கப்பட்டன.

இந்தியாவிற்குள் செருப்பு விற்க வேண்டுமானால், ஏற்கெனவே இங்கே உள்ள செருப்பு உற்பத்தியாளர்களின் விற்பனை பாதிக்கப்படாத வகையில் முடிவெடுப்பது அரசின் கடமை. உள்நாட்டில் எப்பொருட்களை உற்பத்த் செய்ய முடியாதோ அவற்றை மட்டும் இறக்குமதி செய்வதுதான் காலகாலமாக இருந்த பொருளாதாரக் கொள்கை. தாராளமயம் இந்த நடைமுறையைத் தூக்கி வீசி எறியச் சொன்னது. ’நாங்கள் எந்த நாட்டிற்குள்ளும் நுழைவோம் எங்களைத் தடுக்கக் கூடாது. நாங்கள் எந்தத் தொழிலும் செய்வோம், எந்த மலையையும் வெட்டிச் சுரங்கம் அமைப்போம், காடுகளை அழிப்போம்’ எங்கள் மீது எந்தச் சட்டமும் பாயக் கூடாது’ என்பது தாராளமயத்தின் விதி.
இதற்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கிய சதிகாரர் பெயர் ஆர்தர் டங்கல் (Arthur Dunkel). ஆகவே, இந்தத் திட்டம் ‘டங்கல் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

’இந்தியா இந்தத் திட்டத்தில் கையொப்பம் இடக் கூடாது’ என்று 1991 முதல் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கதறின. குறிப்பாக அக்காலத்தில் இருந்த இடதுசாரி அமைப்புகள் அனைத்தும் ‘டங்கல் திட்டத்திற்கு எதிராக’ நடத்திய ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் கணக்கிலடங்காதவை.

டங்கல் திட்டம் என்றால் என்ன என்பதை விளக்கமாக எழுதி, துண்டறிக்கைகள் அச்சிட்டு தெருக்களில், பேருந்து நிலையங்களில், கல்லூரி வாசல்களில் நின்று கொடுத்தார்கள் அவ்வாறான அமைப்பைச் சேர்ந்தவர்கள். நானும் அவ்வாறான வேலைகளைச் செய்தவன்தான்.

தெருமுனைக் கூட்டம் நடத்துவோம். ஒரு சைக்கிள் ரிக்சாவை வாடகைக்கு எடுத்து அதில் பேட்டரி மைக்கையும் குழல் ஒலி பெருக்கியையும் கட்டிக்கொண்டு, தெருக்களில் செல்லும் மக்களைப் பார்த்து ‘உலகமய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடப் போகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வாருங்கள்’ என்று கதறினோம். எங்களைப் பார்த்தாலே முகத்தை அருவருப்பாகவும், அலட்சியமாகவும் மாற்றிக்கொண்டு நகர்ந்தது மக்கள் கூட்டம்.

தேநீர்க் கடைகளில் கூட்டம் இருந்தால் அங்கே நின்று பேசுவோம். நாங்கள் பேசத் துவங்கினால் அந்தக் கூட்டம் கலைந்துவிடும். கடைக்காரர்களுக்கு எங்கள் மீது கோபம் வரும்.

’விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையப் போகின்றன. இனி, நாட்டு விதைகளே அழிக்கப்படும். உணவு நஞ்சாக மாறிப்போகும். ஏராளமான நோய்கள் பெருகும். மக்கள் மருத்துவம் பார்க்கவே முடியாமல் செத்துப் போவார்கள். ஆகவே, இந்த நிறுவனங்களை எதிர்க்க வேண்டும்’ என்று ஒரு முட்டாள் மனிதர் ஊர் ஊராகக் கத்தினார். அவருக்கென அமைப்பும் இல்லை, கட்சியும் இல்லை. பல இடதுசாரிகள் அவரை, ‘அமெரிக்காவின் ஏஜெண்ட்’ என்று பழிதூற்றினார்கள். உங்களுக்கோ அந்தக் காலத்தில் அவரையும் தெரியாது, அமெரிக்காவின் குரூரமுகமும் தெரியாது. அந்த முட்டாள் மனிதரின் பெயர் நம்மாழ்வார்.

அதிகமில்லை, இரண்டே இரண்டு பக்கங்கள் மட்டும்தான் அப்போதைய துண்டறிக்கைகளில் அச்சிடப்பட்டிருந்தன. அந்த இரண்டு பக்கங்களில் உலகமயத்தினால் விளையப் போகும் கொடுமைகளை அந்த அமைப்புகள் விளக்கியிருந்தன. குமுதம், விகடன், கல்கண்டு, முத்தாரம், சினி நியூஸ் ஆகிய பத்திரிகைகளைக் கக்கத்தில் செருகிக்கொண்டு நடந்த மனிதர்கள் இந்த இரண்டு பக்கத் துண்டறிக்கையை வாங்கக் கூட மாட்டார்கள். தப்பித் தவறி வாங்கினாலும் அவற்றைக் கசக்கி வீசிச் செல்வார்கள்.

அந்தத் துண்டறிக்கையை அச்சிடவும், ரிக்சாவுக்கும் ஒலிபெருக்கிக்கும் வாடகை கொடுக்கவும் என்னைப் போன்றவர்கள் வீதிவீதியாக உண்டியல் குலுக்குவோம். எங்கள் முகத்தைப் பார்த்தாலே சில கடைக்காரர்கள் காறித் துப்புவார்கள்.

அந்தக் கடைக்காரர்கள்தான் இப்போது, ‘இனி எங்களுக்கு வியாபாரமே இல்லையா?’ எனக் கேட்கிறார்கள். உண்மைகளை உதாசீனம் செய்த அந்த மக்கள் கூட்டம்தான் இப்போது, ‘ஒரு நூறு ரூபாய் கிடைக்குமா?’ எனக் கேட்டுக்கொண்டு தெருவில் திரிகிறது. மழை, பனி, வெயில் எதுவாகினும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும். பசித்தாலும் நகர முடியாது, மூத்திரத்தையும் மலத்தையும் அடக்கிக்கொண்டாக வேண்டும். ஒரே ஒரு இரண்டாயிரம் தாளை வாங்குவதற்காக மானம் மரியாதையை எல்லாம் இழந்து நிற்க வேண்டும் என்ற ‘தேச சேவை’யை ஆற்றும் மக்கள் எல்லோரும் உண்மையை அவமதித்தவர்கள்தான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இப்படி வீட்டை விட்டு வெளியே வந்து நின்றிருந்தால், இப்போது நம்மிடம் செல்வம் நிலைத்திருக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐயா நம்மாழ்வாரின் பேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நமக்கு நோயற்ற வாழ்க்கை கிடைத்திருக்கும் நஞ்சில்லா உணவும் கிடைத்திருக்கும்.

ஏறத்தாழ எல்லாம் முடியும் நிலையில் இனி எந்த அரசியலை உங்களோடு பேசுவது என எனக்குத் தெரியவில்லை.

இதோ இன்னும் சில காலத்தில் மருத்துவம் முழுக்க முழுக்க தனியார் மயம் ஆகிவிடும், கல்வி முழுமையாக தனியார்வசம் சென்றுவிடும், பெரும்பாலான அரசு வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும், காப்பீட்டு நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும், இரயில்வே துறை தனியாருக்குக் கொடுக்கப்படும். ’வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது அரசின் கடமை அல்ல’ என்ற நிலைமை இப்போதே உள்ளது. இன்னும் சில காலத்தில் உங்களால் அரசாங்கத்திடம் நேரடியாகப் பேசக் கூட முடியாது. வேலைவாய்ப்பு முகமைகள் (Agencies) தனியார் நிறுவனங்களிடம் இருக்கும்.
விதைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ‘நாட்டு விதைகளை வீட்டில் வைத்திருப்பதே கிரிமினல் குற்றம்’
நீர்ச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ‘நிலத்தில் உள்ள நீரும் தனியார் நிறுவனங்களுக்கான உரிமை’
இச்சட்டங்களைப் பற்றி இப்போதே பல அமைப்புகள் பேசுகின்றன, எழுதுகின்றன. உங்களுக்கு அவற்றைப் பற்றி ஏதேனும் கவலை உள்ளதா? ஒரே ஒரு நிமிடம் ஒதுக்கி அந்தச் சட்டங்களைப் பற்றிய கருத்துகளை வாசிக்கிறீர்களா?

’எவராவது வந்து நமக்கு இயற்கை உணவு தருவார், நல்ல தண்ணீர் தருவார் அவற்றையெல்லாம் பணத்தால் வாங்கிக்கொள்ளலாம்’ என்றுதானே இருக்கிறீர்கள்? மேற்கண்ட சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் அப்படி எவரும் வந்து உங்களிடம் விற்பனை செய்ய முடியாது. ஒருவேளை விற்பனை செய்தாலும் அவருக்குக்கொடுக்க உங்களிடம் பணம் இருக்காது, அட்டையைத்தான் தேய்க்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்பவர் அந்த அட்டைப் பணத்தை எப்படி வாங்குவார்? பெருநிறுவனங்களின் கடைகள் பல்கிப் பெருக உள்ளன. இனி நீங்கள் அங்குதான் ‘ஆர்கானிக் வெஜிடபிள்ஸ், ஆர்கானிக் ஹனி, ஆர்கானிக் ரைஸ், ஆர்கானிக் ஸ்பைசஸ், ஆர்கானிக் மில்லட்ஸ்’ எல்லாம் வாங்க வேண்டும். அவர்கள் வைப்பதுதான் விலை.
இயற்கை விவசாயம் செய்வோர் எல்லோரும் அவர்களிடம்தான் விற்பனை செய்ய முடியும். ஏனெனில் அவர்களிடம்தான் பணம் இருக்கும். உங்களிடம் அட்டைகள்தானே இருக்கும்!

மேலும் சில காலம் கழிந்த பின்னர், ‘நிலச் சீர்திருத்தச் சட்டங்கள்’ வரும். அந்தச் சட்டங்களின் படி, பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் வேளாண்மையில் ஈடுபடும். அப்போது இயற்கை விவசாயிகள் இருக்க மாட்டார்கள், பெரும்பண்ணைகள் (corporate ranches) மட்டும்தான் இருக்கும்.
ரேசன் கடைகளும் இருக்காது என்பதால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்காக மக்கள் அடித்துக்கொள்வார்கள். நீங்களும் அந்தக் கூட்டத்தில் நிற்க வேண்டியிருக்கும். உணவு மானியம், கல்வி மானியம், மருத்துவ மானியம் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மக்களுக்கு அவை வெறும் வங்கிக் கணக்கில் மாற்றப்படும். அந்தக் கணக்கில் உள்ள மானியத்தைப் பணமாக எடுப்பதற்குப் பல தடைகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே, இவற்றைப் படித்தால் அதிர்ச்சியாக உள்ளதா? இந்த அதிர்ச்சிகளை எல்லாம் தெள்ளத் தெளிவாக 25 ஆண்டுகளாகக் கூவிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இவற்றைப் பற்றிப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிவிட்டார்கள். நீங்கள் மிக மோசமாக அவற்றை நிராகரித்தீர்கள்.

என் தந்தை, தாய் இருவரும் முழுநேர அரசியல் பணிகளில் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அமைப்பினர் பலர் தமது வாழ்க்கையையே முழுநேர மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். அந்த வாழ்க்கைக்கெல்லாம் ஏதேனும் மரியாதை இந்தச் சமூகத்தில் உள்ளதா? இடதுசாரிகளுடன் எனக்கு முரண்பாடுகள்தான் அதிகம் என்றாலும் அவர்களெல்லோரும் இந்த நிலைமைகளைப் பற்றி, தொண்டை கிழியக் கத்திக்கொண்டுதானிருக்கிறார்கள் என்பதால் அவர்களைப் பணிந்து போற்றுகிறேன்.

தேர்தலில் வாக்களிப்பதுதான் அரசியல் என நீங்கள் நினைக்கிறீர்கள். நமக்கான அரசாங்கம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் பக்குவம் இருப்பவர்கள்தான் அந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இப்போதும் இந்தியாவில் நல்ல மாற்றங்களைக்கொண்டு வர முடியும். ஆனால் அதற்கு நீங்கள் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசியலைப் பற்றி உங்களிடம் பேச வந்த எங்களை உங்கள் பெற்றோர் விரட்டி அடித்தார்கள். ’அவர்களோடு சேராதே…படிப்பு உண்டு வேலை உண்டு என இருக்கப் பழகு’ என்று அறிவுரை வழங்கினார்கள்.

அரசுப் பள்ளிகளை நிராகரிக்கவும், அரசு மருத்துவமனைகளை இழிவு செய்யவும் உங்கள் பெற்றோர் கற்றுத்தந்தார்கள். வேளாண்மை செய்வதே கேவலம் என அவர்கள்தான் இழித்துரைத்தனர். ’மாடு மேய்ப்பது இழிவு. பால் பாக்கெட்டுக்காகக் காத்திருப்பது கவுரவம்’ என்று உங்கள் பெற்றோர் பாடம் நடத்தினார்கள்.

ஒரு சமூகம் தற்சார்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உங்களிடமிருந்து மறைத்தது உங்கள் மூத்த தலைமுறை. அவர்கள்தான் ‘மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முடியாது’ என்ற தண்டனையையும் அனுபவிக்கிறார்கள். அதே தண்டனைச் சிறைக்குள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கூட அவர்கள் அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனியாவது உண்மையான அரசியலைப் படியுங்கள். அந்த அரசியலை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். கல்லூரிக் காலங்களில் ’என் பிள்ளையை நீதான் கெடுத்துவிட்டாய்’ என பல பெற்றோர் என்னிடம் கூறியதுண்டு. இப்போதும் பலர் என்னை அவ்வாறு நிராகரிப்பதையும் நான் பார்க்கிறேன். உங்களை எல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒழுங்காகக் கெடுத்திருந்தால், இப்போது நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்போம். புத்திசாலிகளின் மொழியில் சொல்வதானால், சீக்கிரம் கெட்டுப்போங்கள் நண்பர்களே, சக மனிதர்களையும் நன்றாகக் கெடுங்கள்!

-Published on  04/12/2016